மெர்ஜியானா 39 திருடர்களை ஒழித்தல்

bookmark

காசிம் அடக்கம் செய்யப்பட்டு சில தினங்கள் கழிந்தன.

கொள்ளைக்காரர்கள் சில தினங்கள் பொறுத்து ஒரு நாள் தங்கள் கள்வர் குகைக்கு கொள்ளையடித்த பொக்கிஷங்களுடன் வருகை தந்தனர். குகைக்குள் பிரவேசித்த கொள்ளையர்கள் அங்கு, நான்கு துண்டங்களாக வெட்டப் பட்டுத் தொங்கவிடப்பட்ட காசிமின் உடலைக் காணமல் திகைத்துப் போனார்கள். அப்போதே அவர்கள் நாற்பது பேர்களும் கூடி ஆலோசனை செய்தனர்.

"வெட்டுப் பட்டவனின் உடலை யாரோ ஒருவன் குகைக்குள் வந்து எடுத்துச் சென்று இருக்கிறான் என்றால் இறந்தவன் ஒருவனைத் தவிர இன்னொருவனுக்கும் இந்தக் குகை பற்றிய ரகசியம் தெரிந்து இருக்கிறது" என்று கொள்ளைக்காரர்களின் தலைவன் கூற. உடன் இருந்த முப்பத்தி ஒன்பது கள்வர்களில் ஒருவன்," ஆம் உசூர், எவ்வளவு துணிச்சல் இருந்தால் நமது குகைக்குள் வந்து வெட்டப்பட்ட அந்த உடலை எடுத்துச் சென்று இருப்பார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் சரி. அவர்களை விடக் கூடாது. அப்படி ஒரு வேலை நாம் விட்டு விட்டால் அது நமக்குத் தான் ஆபத்து. நாம் கஷ்டப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து வைத்த பொருள்களுக்கு ஆபத்து வந்து சேரும்" என்றான்.

அதைக் கேட்ட கொள்ளையர்களின் தலைவன் ஒரு முடிவுக்கு வந்தான். அதன் படி ஒரு மூன்று நாட்களுக்கு அனைத்துக் கொள்ளையர்களும் கொள்ளை அடிப்பதை நிறுத்தி விட்டு ஆளுக்கொரு திசையாக அந்தக் குகையை சுற்றி இருந்த நகரங்களுக்குச் சென்றனர். பல இடங்களில் பல்வேறு விதமாக வேவு பார்த்தனர். துப்புத் துலக்கினர். இந்த வகையில் அலிபாபாவின் ஊருக்கும் ஒரு கொள்ளையன் மாறு வேடத்தில் வந்தான். அவன் அந்த ஊருக்கு வந்த வேளை ஒரு அதிகாலை வேளை. அந்த நேரத்தில் பாபா முஸ்தபாவின் கடை மட்டுமே திறந்து இருந்தது. அந்த ஊரில் பிறப்பும், இறப்பும் சகஜம் என்பதால் பாபா முஸ்தபாவுக்கு மட்டும் எப்போதுமே வேலை இருந்து கொண்டே இருக்கும். அன்றும் அப்படித் தான் தனது கடையில் அமர்ந்த படி ஊசி நூலை தைக்க வசதியாக கோர்த்துக் கொண்டு இருந்தார் பாபா முஸ்தபா.

"பாபா முஸ்தபாவிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம்" என்ற முடிவுக்கு வந்த கொள்ளையன். மெல்ல அவரிடம் சென்று, "இன்னும் சரியாக விடியக் கூட இல்லை. அதனால் போதிய வெளிச்சம் கூட இல்லை இந்த நிலையில் எவ்வாறு தங்களுக்கு ஊசியின் துவாரம் தெரிகிறது?" என்று கேட்டான்.

"எனக்கா தெரியாது? இருட்டு அறையில் கூட நான் ஒரு சிறு விளக்குக் கூட இல்லாமல் எதை வேண்டுமானாலும் தைக்கக் கற்றுக் கொண்டவன். இவ்வளவு ஏன்? அண்மையில் வெட்டுப் பட்ட ஒரு உடலைக் கூட நான் தைத்து இருக்கிறேன் தெரியுமா!" என்று கூறி பெருமைப் பட்டான் முஸ்தபா.

"உண்மையாகத் தான் சொல்கிறீர்களா? உயிர் அற்ற சடலத்தைக் கூட தைத்து இருக்கிறீர்களா?" என்று கேட்டான் அந்தக் கொள்ளையன்.

முஸ்தபா "ஆம்" என்று கூறினார். பிறகு சற்று நேரம் யோசித்த பிறகு," நீ சின்னப் பைய்யன் உன்னிடம் அதைப் பற்றி எல்லாம் கூறக் கூடாது. சரி நீ உனது வேலையைப் போய்ப் பார்" என்றார்.

விஷயத்தை வாங்கிக் கொண்ட கொள்ளையன் தனது சகாக்களிடம் சொல்ல விரைந்தான். மூன்று நாட்கள் முடிந்திருந்த நிலையில் அனைத்துக் கொள்ளையர்களும் மீண்டும் அந்தக் கள்வர் குகையின் வாசலில் ஒன்று கூடினர். அப்போது விரைந்து வந்த அந்தக் கொள்ளையன் பாபா முஸ்தபா கூறிய அனைத்து விஷயங்களையும் கொள்ளைக் கூட்டத் தலைவனிடம் கூறினான்.

அதைக் கேட்ட அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு தனது சகாக்களை மாறு வேடத்தில் அவ்வூருக்கு அழைத்துச் சென்றான். அவ்வாறு சென்ற கொள்ளையர்கள் முதல் வேலையாக முஸ்தபாவின் வீட்டை அடைந்தனர். அவரிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தான் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன். அடி தாங்கமால் முஸ்தபாவும் தனது கண்களை ஒரு பெண் வந்து கட்டி பத்துப் பொற்காசுகளை கொடுப்பதாக சொன்னது முதல் நான்கு துண்டுகளான பிணத்தை தைத்தது வரையிலான அனைத்து விஷயத்தையும் கூறி முடித்தான். பிறகு கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் முஸ்தபாவிடம் அந்தக் குறிப்பிட்ட வீட்டை தங்களிடம் காட்டுமாறு கூறினான்.

அதைக் கேட்ட பாபா முஸ்தபா," அந்தப் பெண் எனது கண்களை கட்டி அழைத்துச் சென்றாள். எனினும் நான் எனது வீட்டில் இருந்து அந்தக் குறிப்பிட்ட வீடு வரையிலான அடிகளை எண்ணிக் கொண்டே சென்றேன். நான் திரும்ப வரும் போதும் அப்படித் தான் செய்தேன். எனது ஒவ்வொரு காலடியையும் எண்ணிக் கொண்டே வந்தேன். அதனால் என்னால் உங்களுக்கு அந்த வீட்டை நிச்சயம் காட்டமுடியும். ஆனால் என்னை மட்டும் எதுவும் செய்து விடாதீர்கள்" என்று கூறினான்

"நீ அந்தக் குறிப்பிட்ட வீட்டை எங்களுக்குக் காட்டிக் கொடுத்தால் போதும். உன்னை நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்" என்றான் அந்தக் கொள்ளையர்களின் தலைவன்.

அதன் படியே பாபா முஸ்தபா தன்னுடன் ஒரே ஒரு ஆளை மட்டும் அனுப்புமாறு கூற அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் முஸ்தபாவுடன் ஒரு கொள்ளையனை மட்டும் அனுப்பி வைத்தான். அவனும் முஸ்தபா கண்களை மூடிக் கொண்டு நடக்க அவர் கைகளை பிடித்தபடி அவருடன் சென்றான். முஸ்தபாவுக்கு அந்த ஊர் தெருக்கள் அனைத்துமே அத்துப்படி காதுகளில் விழும் ஓசையை வைத்தே அந்தத் தெருவின் ஓசையை அவர் கண்டு பிடித்து விடுவார். அதனால் அலிபாபாவின் வீட்டை கண்டு பிடிப்பது முஸ்தபாவுக்கு ஒன்றும் பெரிய காரியமாக இல்லை. முஸ்தபா தனது அடிக் கணக்கு முடிந்தவுடன் ஒரு வீட்டின் வாசலில் நின்றார். கண்ணைத் திறந்து அந்தக் குறிப்பிட்ட வீட்டை அந்தக் கொள்ளையனுக்கு அடையாளம் காட்டினர். உடனே அந்தக் கொள்ளையன் அந்தக் குறிப்பிட்ட வீட்டின் கதவில் சுண்ணாம்பை வைத்து ஒரு பெருக்கல் குறியீட்டை அடையாளத்துக்கு போட்டு விட்டு, "இரவு நேரம் வரட்டும் வீட்டில் இருப்பவர்களை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்" என்று தனது மனதினில் தீர்மானித்தவனாய் சென்றான்.

இந்தக் காட்சியை சந்தைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டு இருந்த மெர்ஜியானா சற்று தூரத்தில் இருந்து பார்த்தாள். அவளுக்கு எல்லாமே புரிந்து விட்டது. என்ன செய்வது என்று யோசித்தாள். வீட்டில் இருந்த யாரிடமும் இது பற்றிக் கூற விரும்பாமல் சூரியன் அஸ்தமித்து இரவு வேளை வந்து கொண்டு இருந்த சமயம் நள்ளிரவுக்கு முன்னாள் அதாவது அந்த ஊர் கொஞ்சம் அடங்கியதும் தனது கதவில் இருந்த குறியீட்டைப் போன்றே அந்த தெருவில் இருந்த அனைத்து வீடுகளின் வாசல் கதவுகளிலும் அதே போன்ற ஒரு குறியீட்டை சுண்ணாம்பைப் பயன்படுத்தி போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல படுக்கச் சென்றாள்.

இந்நிலையில் முஸ்தபாவுடன் சென்ற அந்தக் கொள்ளையன் தனது தலைவனிடம் சென்று தான் அந்தக் குறிப்பிட்ட வீட்டை கண்டு பிடித்து விட்டதாகவும் அடையாளத்துக்கு அதில் ஒரு பெருக்கல் குறியை போட்டு இருப்பதாகவும் கூறினான். அதைக் கேட்ட கொள்ளைக் கூட்டத்துத் தலைவன் அந்தக் கொள்ளையனை வெகுவாகப் பாராட்டினான். பிறகு யாருக்கும் சந்தேகம் வராதபடி அன்றைய தினம்  நள்ளிரவு வேளையில் அந்த வீட்டுக்குச் சென்று அங்கு இருப்பவர்களை கொன்று விடலாம் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நள்ளிரவில் கிளம்பினர் கொள்ளையர்கள் குறிப்பிட்ட அந்தத் தெருவை அடைந்த மாத்திரத்தில் ஒரு கணம் திகைத்து நின்றனர். காரணம் அந்தத் தெருவில் இருந்த அனைத்து வீடுகளிலுமே பெருக்கல் குறியீடு சுண்ணாம்பினால் போடப்பட்டு இருந்தது. அதைக் கண்ட கொள்ளையர்களின் தலைவன் வெகுண்டு எழுந்து முன்பு முஸ்தபாவுடன் உளவு பார்க்கச் சென்று குறியீடு போட்ட அந்தக் கொள்ளையனை கோபத்தில் நைய்யப் புடைத்தான்.

அன்றைய தினம் மேற்கண்ட காரணத்தால் ஏமாற்றத்துடன் முஸ்தபாவின் வீட்டுக்கு மீண்டும் சென்று சேர்ந்தனர் கொள்ளையர்கள். பிறகு அன்றைய தினம் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனே முஸ்தபாவுடன் சென்றான். அதே போல முஸ்தபா தனது கண்களை மூடிக் கொண்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி அடிக் கணக்கின் அடிப்படையில் தெருவில் நடந்து சென்றான். ஒரு குறிப்பிட்ட அடியை எண்ணி முடித்த மாத்திரத்தில் அவ்விடத்தில் நின்று அலிபாபாவின் வீட்டை அந்தக் கொள்ளைக்காரத் தலைவனிடம் காட்டினான் முஸ்தபா. அந்த வீட்டை நன்கு மனதில் பதித்து வைத்துக் கொண்டான் அந்தக் கொள்ளை கூட்டத்தின் தலைவன். பிறகு முஸ்தபாவின் வீட்டை அடைந்த அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் தனது சாகாக்களிடம் அந்தக் குறிப்பிட்ட வீட்டைத் தான் கண்டு பிடித்து விட்டதாகவும் விரைவில் அந்த வீட்டில் உள்ள அனைவரையும் கொன்று ஒழித்து விடப் போவதாகவும் கூறினான். அதைக் கேட்ட அனைவரும் ஆனந்தம் கொண்டனர்.

பிறகு சிறிது நேரத்தில் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் ஒரு அற்புதமான திட்டத்தை வகுத்தான். அதன்படி இருபது கோவேறு கழுதைகளை வாங்கி வரும்படியாகக் கூறினான். அதன் பிறகு ஒரு பெரிய தோல் ஜாடி நிறையக் கடுகு எண்ணெயையும் அதே போன்று முப்பத்தி ஒன்பது காலி ஜாடிகளையும் வாங்கி வரக் கூறினான். ஒவ்வொரு ஜாடியிலும் ஒவ்வொருவர் இருந்து கொள்ளும் அளவில் அந்தத் தோல் ஜாடி இருக்க வேண்டும் என்றும் கூறினான். கொள்ளைக் காரத் தலைவன் சொன்னது போலவே எல்லாப் பொருட்களும் வந்து சேர்ந்தன. பிறகு மேலும் தனது திட்டத்தை விரிவாகக் கூறத் தொடங்கினான் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன், "நீங்கள் முப்பத்தி ஒன்பது பேரும் ஒவ்வொரு ஜாடியினுள்ளும் வசதியாக அமர்ந்து கொள்ள வேண்டும்; உடன் அனைவரும் தங்கள், தங்கள் உடை வாளை வைத்துக் கொள்ள வேண்டும். இருபதாவது கழுதையின் மீது உள்ள ஒரு புறத்தில் உள்ள ஒரு ஜாடியில் ஒருவர் தான் இருப்பார். இன்னொரு ஜாடியில் நிறைய எண்ணெய் இருக்கும் என்று கூறினேன் அல்லவா, எண்ணெய் வணிகனின் தோற்றத்தில் நான் கழுதைகள் அனைத்தையும் ஒட்டிக் கொண்டு நகரத்திற்குப் போவேன். குறிப்பிட்ட அவனுடைய வீடு வந்ததும் அந்த வீட்டு உரிமையாளரிடம் அன்று இரவு தங்கிப் போவதற்கு அனுமதி கேட்பேன். அதன் பிறகு நள்ளிரவு வேளையில் நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்து நான் குரல் கொடுப்பேன் அல்லது சூழ்நிலையைப் பொறுத்து தொடர்ச்சியாக எனது கையை மூன்று முறைத் தட்டுவேன். அப்போது நீங்கள் அனைவரும் குபீர் என்று பாய்ந்து வந்து அவனைக் கொன்று விட வேண்டும். அங்குள்ள செல்வங்களையும் நாம் விட்டு வைக்கக் கூடாது. அவை அனைத்தையும் நமது கோவேறுக் கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு வந்து விட வேண்டும்" என்று முடித்தான்.

தனது தலைவனின் இந்தத் திட்டத்தைக் கேட்ட கொள்ளையர்கள் அனைவரும் அற்புதமான திட்டம் என்று கூறி மகிழ்ந்தனர். தலைவனின் அறிவே அறிவு தான் என்று வேறு சிலர் கூறிப் பாராட்டினார்கள்.

பிறகு கொள்ளையர்களின் தலைவன் தான் சொன்னத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினான். அதன் அடிப்படையில் ஒரு பெரிய வணிகன் போன்று உடை அணிந்து இருபது கோவேறு கழுதைகளின் மீதும் ஜாடிகளை ஏற்றினான். அதாவது ஒவ்வொரு கழுதையின் மீது இரண்டு ஜாடிகள் வீதம் ஏற்றினான். மொத்தம் முப்பத்தி ஒன்பது ஜாடிகளில் ஆயுதங்களுடன் கொள்ளைக்காரர்கள் இருந்தார்கள். ஒரு ஜாடியில் மட்டும் கடுகு எண்ணெய் இருந்தது. இரவு வந்ததும் கோவேறு கழுதைகளை ஒட்டிக் கொண்டு தலைவன் போனான். அலிபாபாவின் வீட்டின் முன்னால் அவற்றை நிறுத்தினான். அந்த சமயத்தில் தான் இரவு வேளை உணவை முடித்துவிட்டு அலிபாபா வீட்டின் முன்னாள் உலவிக் கொண்டு இருந்தான்.

அலிபாபாவைக் கண்ட மாத்திரத்தில் இவன் தான் அந்த வீட்டின் தலைவனாக இருக்க வேண்டும் என்று நம்பிய கொள்ளைக் காரத் தலைவன். அவன் அருகில் சென்று அவனை வணங்கிய படி, "நான் ஒரு வியாபாரி. ஒவ்வொரு பெரிய நகரத்திற்கும் கடுகு எண்ணெய்யை விநியோகிப்பேன். தரத்தில் சிறந்த எங்கள் எண்ணெய்யைத் தான் எல்லோரும் விரும்பி வாங்குவார்கள். அந்த அளவுக்கு அருகில் உள்ள ஊர்களில் எங்களது எண்ணெய்க்கு மவுசு அதிகம். தற்போது இரவு நேரம் வந்து விட்டதால் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கலாம் என்று அஞ்சுகிறேன். அதனால் தயவு செய்து இன்று ஒரு நாள் இரவு மட்டும் தாங்கள் இங்கு தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டுகிறேன். கேட்பவர்களுக்கு, கேட்டபடி உதவி செய்யும் குணம் கொண்டவர் என்று தங்களைப் பற்றி அக்கம் பக்கத்தினர் கூறக் கேட்டு இருக்கிறேன். அதனால் எனக்கும் தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டான் அந்தக் கொள்ளையன்.

சற்று நேரம் யோசித்த அலிபாபா வணிகனின் வேஷத்தில் வந்திருப்பவன் யார் என்று அறியாததால் அந்தக் கொள்ளையனை உண்மையான வணிகன் என்றே நினைத்துக் கொண்டு தனது வீட்டில் தங்க இடம் கொடுத்தான். பிறகு அலிபாபாவின் அனுமதியுடன் அந்த மாறுவேடத்தில் இருந்த கொள்ளைக்காரன் தான் கொண்டு வந்த கழுதைகள் அனைத்தையும் தொழுவத்தில் அடைத்துக் கொண்டான். அத்துடன் அவைகளுக்கு ஆகாரமும், தண்ணீரும் வைத்தான்.

இந்த சமயத்தில் அலிபாபா மெர்ஜியானவை அழைத்து, "நமது வீட்டில் தங்க ஒரு விருந்தாளி வந்து உள்ளார். அவர் வசதியாகத் தங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடு" என்றான். அதன் படியே செய்வதாக கூறிவிட்டுச் சென்றாள் மெர்ஜியானா.

பின்னர் மாறுவேடத்தில் இருந்த அந்தக் கொள்ளைக்காரன் மீண்டும் அலிபாபாவிடம் வந்து பேச்சுக் கொடுத்தான். அப்போது அன்று இரவு தன்னுடனே உணவு உண்ண வேண்டும் என்று கூறினான் அலிபாபா.

"அவசியம் உணவு உண்கிறேன் பிரபு. ஆனால் ஒரு வேண்டுகோள். எனக்குத் தாங்கள் அளிக்கும் எந்த உணவிலும் உப்பு சிறிதளவு கூட இருக்கக் கூடாது" என்று அலிபாபாவிடம் வேண்டினான் அந்தக் கொள்ளையன். அலிபாபாவும் அதற்கு ஒப்புக் கொண்டு கொள்ளைக் காரத் தலைவனிடம் இருந்து  விடை பெற்று மெர்ஜியானாவை சந்தித்து, "மெர்ஜியானா! இன்னொரு முக்கியமான விஷயம் அந்த வணிகர் நமது வீட்டில் உணவு உண்ண ஒரு வேண்டுகோள் வைத்து உள்ளார். அதன் படி நீ அவருக்குப் பரிமாறும் எந்த உணவிலும் உப்பு இருக்கக் கூடாது. சரிதானே!" என்று அலிபாபா சொல்ல அதற்கு ஒப்புக் கொண்டு அப்படியே சமைக்கத் தொடங்கினாள் மெர்ஜியானா. இருந்தும் அவளது மனதில் சந்தேகம் நிழல் ஆடியது.

"ஏன் அந்த வணிகர் உப்பிட்ட உணவை உண்ண மறுக்கிறார்? இதில் ஏதோ நிச்சயம் விஷயம் உள்ளது. உண்மையில் ஒரு வீட்டுக்குக் கெடுதல் செய்ய நினைப்பவர்கள் தான் அந்த வீட்டின் உப்பைத் திண்ண மறுப்பார்கள். அப்படி இருக்க இந்த வணிகர் நமக்கு ஏதோ பெரிய கெடுதலை செய்ய இருக்கிறாரா? அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன?" என்று தனது மனதிற்குள் பல விதங்களில் கேள்விகள் எழுப்பி அதனால் சிந்தனை வயப்பட்டாள் மெர்ஜியானா. பிறகு வேகவேகமாக அலிபாபா சொன்னபடியே சமைத்து முடித்தாள் அவள். உணவு வேலையும் முடிந்தது. உப்பிலாத உணவைக் கூட வேண்டிய மட்டும் அதிகமாக உண்டான் அந்தக் கொள்ளையன். அப்போது அலிபாபா அடுத்த நாள் காலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை மெர்ஜியானாவிடம் கூறிவிட்டு அவன் தனது வழியில் ஓய்வு எடுக்கச் சென்று விட்டான்.

அலிபாபாவின் நிலை இப்படி இருக்க உணவை முடித்துக் கொண்ட அந்தக் கொள்ளையன் தொழுவத்தின் பக்கமாகச் சென்றான். அதனைக் கண்டு கொண்ட மெர்ஜியானாவும் சந்தேகம் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து சென்றாள். தொழுவத்திற்குச் சென்ற தலைவன் அந்த ஜாடிகள் பக்கத்தில் நின்று மெல்லத் தான் பேசினான். அவன் ஜாடிக்குள் இருக்கும் கொள்ளையர் ஒவ்வொருவரிடமும் சென்று ,"இன்று இரவு அதாவது நள்ளிரவில் எனது குரலைக் கேட்டதும் தோல் ஜாடியானதால் மேல் பாகத்தில் இருந்து அடிப் பாகம் வரை உங்களிடமுள்ள கத்தியால் கிழித்து விட்டு வெளியேற வேண்டும்" என்றான்.

இப்படி ஒவ்வொரு ஜாடியிடமும் சென்று மாறுவேடத்தில் இருந்த அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் பேசிக் கொண்டு இருப்பதை கவனித்தாள் மெர்ஜியானா. ஆனால், அவள் சற்று தூரத்தில் இருந்ததால் அந்த வணிகன் என்ன பேசிக் கொண்டு இருக்கிறான் என்பதை கேட்கவே முடியவில்லை.

அதே சமயத்தில் மெர்ஜியானா இன்னொன்றையும் கவனிக்கத் தவற வில்லை, அது யாதெனில் அந்த வணிகன் பெரிய பெரிய ஜாடிகளைக் கொண்டு வந்து அடிக்கி வைத்து இருந்தான். அதில் முதல் ஜாடியின் மூடியில் மட்டுமே எண்ணெய்ப் பிசு பிசுப்பு காணப் பட்டது. மற்ற ஜாடிகளில் சிறிதும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு இல்லை. அத்துடன் எண்ணெய் பிசு பிசுப்பு காணப்பட்ட அந்த ஜாடியில் மட்டும் ஓட்டை இல்லை. மற்ற ஜாடிகள் அனைத்திலும் மூச்சு விட ஏதுவாக ஒரு சிறு துவாரம் இருந்தது. இதை விட அனைத்துமே தோல் ஜாடிகளாக இருந்ததால் உள்ளே இருப்பவர்கள் நெளியும் சமயத்தில் அந்த ஜாடிகள் உப்பின; அப்போது அந்த இடம் கொஞ்சம் புடைத்துக் காணப்பட்டது. மேற்கண்ட இவற்றை எல்லாம் நன்கு நுணுக்கமாகக் கவனித்து விட்டாள் மெர்ஜியானா. அவளுக்கு எல்லாமே தவறாகப் பட்டது. பிறகு அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் தொழுவத்தில் இருந்து புறப்பட்ட சமயத்தில் மெர்ஜியானா அவனது கண்களில் படாதவாறு மெல்ல நகர்ந்து சென்றாள்.

கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் தனது அறையை அடைந்ததும் மெர்ஜியானா அந்தத் தலைவனிடம், "தங்களுக்குப் படுக்கை தயாராக இருக்கிறது. குடிப்பதற்குத் தண்ணீரும் கூஜாவில் வைத்து இருக்கிறேன்" என்று கூறவும், நன்றி கூறியவனாய் படுத்துக் கொண்டான் அவன்.

பின்னர் மெர்ஜியானா அந்தத் தொழுவத்திற்குச் சென்றாள். அவளது காலடி ஓசையை கேட்டதும் தலைவன் தான் வந்து உள்ளான் என்று எண்ணிக் கொண்டகொள்ளையர்களில் ஒருவன் "தலைவா, நாம் பாய்வதற்கு ஏற்ற வேளை வந்து விட்டதா?" என்று கேட்டான். அந்தத் தோல் ஜாடியில் போட்டு இருந்த ஓட்டைகள் மூலம் மெர்ஜியானா தெள்ளத் தெளிவாக அந்த வார்த்தையைக் கேட்டாள். உடனே, அவள் தனது தொண்டையை இறுக்கிக் கொண்டு மெல்லிய குரலில் "சத்தம் போடாதே! நேரம் இன்னும் வரவில்லை" என்றாள்.

பிறகு மெர்ஜியானா தனது அறைக்குச் சென்றாள். அந்த வணிகனின் முகத்தை அவளுக்கு எங்கோ பார்த்தது போலத் தான் இருந்தது. அவள் நன்கு யோசித்தாள். அப்போது அவளுக்கு சிறு வயதில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நினைவுக்கு வந்தது.

'அது ஒரு அழகிய மலைக் கிராமம். தனது தாய், தந்தையுடன் சந்தோஷமாக ஓடி விளையாடி மகிழ்ந்து கொண்டு இருந்தாள் மெர்ஜியானா. அப்போது சிறுமியாக இருந்த அவளை ஆசையுடன் அணைத்தபடி உணவு ஊட்டிக் கொண்டு இருந்தாள் மெர்ஜியானாவின் தாய். அப்போது திடீர் என்று எண்ணற்ற குதிரைகளின் காலடி ஓசையைக் கேட்டனர் அந்தக் கிராமத்து மக்கள். சிறிது நேரத்தில் எங்கும் புழுதி பறந்தது. நாற்பது பேர் கொண்ட ஒரு கொள்ளைக் காரக் கும்பல் அந்தக் கிராமத்துக்குள் புகுந்து அனைவரையும் கொன்று தீர்த்தது. கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் அள்ளிச் சென்றது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்ப முயன்றனர் மெர்ஜியானாவின் குடும்பத்தினர். ஆனால் சூதாரித்துக் கொண்ட கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மெர்ஜியானாவின் தாய், தந்தையரை உயிருடன் எரித்து விட்டுச் சென்றான். மெர்ஜியானாவை ஒரு கூடையில் இருக்கச் செய்து விட்டு 'என்ன நடந்தாலும் வெளியில் வரக் கூடாது' என்று கூறிவிட்டு அவளது தந்தை சென்று இருந்ததால், மெர்ஜியானா மட்டுமே அந்த மலைக் கிராமத்தில் கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்தாள்'

மேற்கண்ட இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள் மெர்ஜியானா. இப்போதோ அதே கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் தான் மாறு வேடத்தில் வந்து உள்ளான். அவனது முகத்தை மெர்ஜியானாவினால் சில வருடங்கள் கடந்தும் கூட மறக்கவே முடியவில்லை. அவள் எத்தனையோ இரவுகள் தூங்காமல் இந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து அழுதும் இருக்கிறாள். அந்த நிலையில் காலம் இப்போது அந்தக் கொள்ளையனை அவனது கூட்டத்துடன் பழி வாங்க மெர்ஜியானாவுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பத்தை கொடுத்து இருந்தது. அதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்தாள் மெர்ஜியானா.

பிறகு இனிமேலும் காத்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று எண்ணிய மெர்ஜியானா அடுப்பின் மேல் ஒரு பெரிய வாணலியை வைத்து அதில் அவன் கொண்டு வந்த கடு எண்ணெய்யை ஊற்றி அடுப்பைப் பற்ற வைத்தாள். நன்றாகக் காய்ந்த விறகு மத மத என்று எரிந்தது. எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் ஒவ்வொரு பெரிய குவளையிலும் கொதிக்கும் எண்ணெய்யை  நிரப்பி வரிசையாக ஒவ்வொரு ஜாடியிலும் ஊற்றி மூடியை அடைத்து வைத்து விட்டாள். இவ்விதமாக ஒரு ஜாடி எண்ணெய்யையும் கொதிக்க வைத்து எல்லா ஜாடிகளிலும் ஊற்றிய பின்னர் தான் அவள் நிம்மதி அடைந்தாள். இப்படியாக அந்தக் கொதிக்கும் எண்ணெய்யில் அவ்விதமே அவிந்து அந்த முப்பத்தி ஒன்பது பேர்களும் பிணமாகி விட்டனர்.

மெர்ஜியானா, இவ்வாறாக அந்தக் கொள்ளைக் கூட்டத்திற்கே ஒரு முடிவை கட்டி விட்டு மெல்லத் தனது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். அப்போதில் இருந்து சரியாக ஒரு மணிநேரம் கழிந்தது. சரியாகப் பன்னிரண்டு மணிக்கு எழுந்தான் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன். அவன் ஜன்னலைத் திறந்து பார்த்த சமயம் எங்கும் இருள் பரவி இருந்தது. ஒரு வித மயான அமைதியை அவன் உணர்ந்தான். உடனே அவன் இதுவே தனது சகாக்களை அழைக்க சரியான சந்தர்பம் என்பதை உணர்ந்தவனாய் கூப்பிட்டுப் பார்த்தான் பிறகு தனது கைகளை தட்டினான். ஆனால், பதிலுக்கு எந்த ஒரு ஓசையும் வரவில்லை. திடுக்கிட்டு மீண்டும் ஒரு முறைத் தனது கைகளைத் தட்டினான் மெல்ல கூப்பிட்டும் பார்த்தான் அந்தக் கொள்ளையர்களின் தலைவன் இந்த முறையும் கூட எந்த வித பதிலும் இல்லை. அதனால் சந்தேகம் அடைந்த அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் ஜாடிகள் இருந்த கொட்டகைக்குச் சென்றான். ஜாடியை நெருங்கும் சமயத்தில் கொதித்த எண்ணெய்யின் வாசனையையும் உடன் ஏதோ ஒரு துர் வாடையையும் ஒருங்கே வீசுவதை உணர்ந்தான். அதனால் பதற்றத்துடன் ஒவ்வொரு ஜாடியையும் திறந்து பார்த்தான். அவனது சகாக்கள் அத்தனை பேருமே அவிந்த நிலையில் இறந்து போய் இருப்பதைக் கண்டான். இதற்கு மேல் அங்கு இருந்தால் தனது உயிருக்கும் ஆபத்து வந்து சேரும் என்பதை உணர்ந்தவனாக விரைந்து அவ்விடத்தை விட்டு ஓடிச் சென்று மறைந்தான்.