கைகேயி சூழ்வினைப் படலம் - 1641
காலை ஒலிகள்
1641.
தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன;
தார் ஒலித்தன; பேரி ஆம்
முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன;
முத்து ஒலித்து எழும் அல்குலார்
இழை ஒலித்தன; புள் ஒலித்தன;
யாழ் ஒலித்தன; - எங்கணும் -
மழை ஒலித்தனபோல் கலித்த,
மனத்தின் முந்துறு வாசியே.
எங்கணும் - நகரின் எல்லா இடங்களிலும்; தழை ஒலித்தன -
பீலிக்குஞ்சங்கள்விளங்கின; வண்டு ஒலித்தன - வண்டுகள் ஆரவாரம்
செய்தன; தார் ஒலித்தன -மலர்மாலைகள் விளங்கின; பேரி ஆம் முழவு
ஒலித்தன - மலர்மாலைகள் விளங்கின; பேரிஆம் முழவு ஒலித்தின -
பேரிகை ஆகிய வாத்தியங்கள் ஒலித்தன; தேர் ஒலித்தன -தேர்கள்
தெருவில் ஓடும்போது ஒலி எழுப்பின; முத்து ஒலித்து எழும்
அல்குலார் - முத்துவடங்கள்உராய்ந்து ஒலி யெழுப்பும் இடையினையுடைய
பெண்களுடைய; இழை ஒலித்தன - அணிகலன்கள் ஒலித்தன; புள்
ஒலித்தன - பறவைகள் கூவின; யாழ் ஒலித்தன - வீணைகள் இசைத்தன;
மனத்தின் முந்துறு வாசி - மனத்தின் வேகத்தைக் காட்டிலும் விரைந்து
ஓடும் குதிரைகள்; மழை ஒலித்தன போல் - மேகங்கள் முழங்கினாற்போல;
கலித்தன - ஒலித்தன.
ஒலித்தன என்னும் சொல் பல்வேறு பொருள்களில் அடுத்தடுத்து
வந்தமையால் சொற்பின்வருநிலை அணி. 62
