மெர்ஜியானா காசிமின் மகனைக் கைப்பிடித்தல்

bookmark

மெர்ஜியானா கொள்ளைக் கூட்டத்தின் தலைவனை கொல்லுதலும் காசிமின் மகனைக் கைப்பிடித்தலும்

இப்படியாக இரவில் நடந்த எந்த நிகழ்ச்சி பற்றியும் அலிபாபாவுக்குத் தெரியாது. அதிகாலையில் எழுந்த அலிபாபா அவன் அன்றைய தினம் வெளியூர் செல்லத் திட்டமிட்டு இருந்ததால் சுறுசுறுப்பாக ஹம்மாவிற்கு குளிக்கச் சென்று விட்டான். அவன் அப்படியாக குளித்து விட்டுத் திரும்பிய பின்னரும் கூட அந்த ஜாடிகள் அவ்விடத்திலேயே இருந்தன. உடனே அலிபாபா தனது விசுவாசமான வேலை ஆளான மெர்ஜியானாவை அழைத்து அந்த வியாபாரியைப் பற்றி விசாரித்தான். மெர்ஜியானா அலிபாபாவிடம் முந்தய இரவு நடந்த அனைத்து விஷயத்தையும் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னாள். அத்துடன் மாறுவேடத்தில் வந்திருந்தவன் தான் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் என்ற உண்மையையும் எடுத்துக் கூறினான். அதனை அலிபாபா முதலில் நம்பவில்லை. எனினும் மெர்ஜியானா அலிபாபாவுக்கு அனைத்தையும் புரியவைத்தாள். அவன் மீண்டு வந்த ஆபத்தைப் பற்றி எடுத்துச் சொன்னாள். அத்துடன் அலிபாபவை அழைத்துக் கொண்டு சென்று ஒரு ஜாடியைச் சுட்டிக் காட்டி "இதில் என்ன இருக்கிறது என்று நீங்களே திறந்து பாருங்கள்" என்றாள். அலிபாபா அந்த ஜாடியைத் திறந்த மாத்திரத்தில் அலறி விட்டான். காரணம் அந்த ஜாடிக்குள் ஒரு மனிதன் வெந்த நிலையில் இருந்தான். இப்படியே அனைத்து ஜாடியிலும் ஒரு பிணம் வெந்த நிலையில் இருந்ததைக் கண்ட அலிபாபா வாயடைத்துப் போனான். மெர்ஜியானாவின் அறிவித் திறமையால் தனது உயிர் காக்கப் பட்டதை எண்ணி நிம்மதி அடைந்தான். அத்துடன் அவளுக்குப் பல்வேறு விதத்தில் நன்றிகளைத் தெரிவித்தான்.

அப்போது மெர்ஜியானா அலிபாபாவிடம், "உணர்ச்சி வசப் படாதீர்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவதற்கு உள்ளாக இந்தப் பிணங்களை நாம் அப்புறப்படுத்தி ஆக வேண்டும்" என்றாள்.

அதன்படி அலிபாபாவும் அவனது மிகுந்த நெருங்கிய நண்பனான வாய்பேச முடியாத அப்துல்லாவும் தோட்டத்தில் மிகவும் ஆழமாகவும், அகலமாகவும் ஒரு பள்ளத்தைத் தோண்டி அதில் இறந்த கொள்ளையர்கள் அனைவரையும் அவர்களது ஆயுதங்களுடன் புதைத்தனர். பிறகு தோல் ஜாடிகளையும் கூட இன்னொரு பள்ளத்தில் புதைத்து விட்டனர். அத்துடன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் ஒட்டி வந்த இருபது கோவேறு கழுதைகளையும் சந்தைக்கு ஒன்று இரண்டாக ஓட்டிச் சென்று, ஓட்டிச் சென்று அலிபாபா அவை அனைத்தையும் நல்ல விலைக்கு விற்றுத் தீர்த்தான். அதன் பின்னர் தான் மெர்ஜியானா நிம்மதி அடைந்தாள்.

எனினும், அவள் மனதில் மீண்டும் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனைப் பற்றிய அச்சம் இருந்து கொண்டு தான் இருந்தது. அவன் எப்படியும் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்தாள் மெர்ஜியானா. அத்துடன் அலிபாபாவையும் சில நாட்களுக்கு குறிப்பாக இரவில் எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினாள். மெர்ஜியானாவின் அறிவுரைப்படியே நடந்து கொண்டான் அலிபாபா.

அலிபாபாவின் நிலை இப்படி இருக்க, தப்பிச் சென்ற கொள்ளையனோ தனது கள்வர் குகையில் சிறிது காலம் பதுங்கி இருந்தான். அங்கேயே ஓய்வு எடுத்த படி எப்படியாவது அலிபாபாவை கொன்று விட வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொண்டு இருந்தான். அந்தக் கொள்ளையனின் மனம் அமைதி அடையவில்லை. தான் பல நாட்கள் போட்ட திட்டத்தை அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் செயல் படுத்தத் தொடங்கினான். அவனிடம் ஏராளமான செல்வங்கள் இருந்ததால் நகரத்திற்குச் சென்று ஒரு பெரிய கடையை வாடைக்கு எடுத்துக் கொண்டு தன்னை ஒரு இரத்தின வியாபாரி என்று கூறிய வண்ணம் "குவாஜா ஹசன்" என்ற பெயரில் வியாபாரத்தை நடத்தி வந்தான். தன்னிடம் உள்ள செல்வதை எல்லாம் செலவு செய்து எண்ணற்ற வர்த்தகர்களை நண்பனாக்கிக் கொண்டான் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன். அவனது ஒரே நோக்கம் அலிபாபாவை அவனது குடும்பத்துடன் கொல்வதே ஆகும்.

அலிபாபாவின் அண்ணனின் மகனான காசிமின் மகன் வியாபாரம் செய்து வந்த கடையும் அந்த மாறுவேடத்தில் இருந்த கொள்ளைக் காரன் திறந்து இருந்த கடையும் எதிர் எதிரே தான் இருந்தது. அதனால் காசிமின் மகனுக்கும், அந்தக் கொள்ளைக்காரத் தலைவனுக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. கொள்ளைக்காரத் தலைவன் காசிமின் மகனிடம் தேன் ஒழுகப் பேசினான். அவனைக் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அலிபாபாவையும் அவனது குடும்பத்தையும் அழிக்க வேண்டும் என்பது தான் அந்தக் கொள்ளையனின் தலையான நோக்கமாக இருந்தது.

காசிமின் மகனும் வந்திருப்பவன் உண்மையிலேயே ஒரு வியாபாரி தான் என்று நம்பியபடி தனது குடும்பத்து விஷயங்களைக் கூட அவனிடம் பகிர்ந்து கொண்டான். காசிமின் மகனை அடிக்கடி பார்க்க அவனது கடைக்கு வந்து செல்வான் அலிபாபா. அதனைப் பார்த்த அந்தக் கொள்ளைக் காரன் ஒன்றுமே தெரியாதது போல அலிபாபாவை யார் என்று கேட்டான். உடனே காசிமின் மகன் "அவர் எனது மதிப்பிற்குரிய சிறிய தந்தை அலிபாபா" என்று கூறினான்.

இப்படியாக வியாபாரியின் வேஷத்தில் இருந்த அந்தக் கொள்ளைக்காரனுக்கும், காசிமின் மகனுக்கும் நெருங்கிய நட்பு உருவானது. அந்தக் கொள்ளைக்காரனைப் பொருத்தவரையில் அனைத்துமே அலிபாபாவை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட நாடகம் தான். இந்நிலையில் அவன் அடிக்கடி காசிமின் மகனுக்கு விருந்து வழங்கிச் சிறப்பித்து வந்தான். காசிமின் மகனுக்கும் "குவாஜா ஹசன்" தனக்கு அளித்த விருந்துக்கு பதில் விருந்து தர வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்த ஆசையை சிற்றப்பா அலிபாபாவிடம் கூற தனது அண்ணன் மகனின் ஆசைக்கு சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தான் அலிபாபா.

உடனே குவாஜ ஹசனை யார் என்று தெரியாமல் அவனை விருந்துக்கு அழைத்தான் காசிமின் மகன். அலிபாபாவின் வீட்டை அடைந்த குவாஜ ஹசன் அலிபாபாவை பார்த்த மட்டில் அவன் தன்னை கண்டு பிடித்து விடுவானோ என்று நினைத்தான். ஆனால் அலிபாபாவால் அவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. காரணம் ஏற்கனவே ஒரு முறை அந்தக் கொள்ளைக் கூட்டத்துத் தலைவனை ஒரு இரவு நேரத்தில் தான் அலிபாபா வரவேற்று இருந்தான். மேலும், அப்போது அவன் வந்த தோற்றத்துக்கும், இப்போது அவன் கொண்ட தோற்றத்துக்கும் இடையே நிறைய வித்யாசம் இருந்தது. அதனால் தான் அலிபாபாவால் அந்தக் கொள்ளையனை அடையாளம் காண முடியவில்லை. அத்துடன் அலிபாபாவே குவாஜ ஹசனை முகம் மலர தனது வீட்டினுள் அழைத்துச் சென்றான். அவனுக்கு ஆசனம் அளித்தான். குடிக்கப் பழ ரசங்களை கொண்டு வரச் சொல்லி கொடுத்தான்.

அப்போது குவாஜ ஹசன் அலிபாபாவிடம் அவனது அண்ணன் மகனைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினான். அதனைக் கேட்ட அலிபாபா மிகவும் மகிழ்ந்தான். பிறகு குவாஜ ஹசனிடம் அலிபாபா, "அன்பரே, முதன் முதலாக எங்களது வீட்டிற்கு வந்து உள்ளீர்கள் கட்டாயம் தாங்கள் உணவுண்டு ஓய்வெடுத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்" என்று மிகவும் தாழ்மையுடன் கட்டாயப்படுத்திக் கேட்டான். குவாஜ ஹசனும் அதற்கு சம்மதம் தெரிவித்தான். அத்துடன்," அலிபாபாவே தனக்கும் தனது குடும்பத்தினர் சாவுக்கும் நாள் குறித்து விட்டான்" என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டான் குவாஜ ஹசன்.

மெர்ஜியானா சுவையான உணவு வகைகளைப் பரிமாறி அனைவரையும் உண்ண அழைத்தாள். அலிபாபாவும் குவாஜ ஹசனை அழைத்துக் கொண்டு உணவு உண்ண வந்தான். குவாஜ ஹசனின் நடை, பாவனை என அனைத்துமே மெர்ஜியானாவுக்கு சந்தேகத்தை எழுப்பியது. அவனை எங்கோ பார்த்தது போல உணர்ந்தாள் மெர்ஜியானா. உணவு பரிமாறும் சமயத்தில் அவனது வெறிப்பிடித்த கண்களைக் கண்டு வந்திருப்பது கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் தான் என்பதை உணர்ந்து கொண்டாள்.

ஆம். மெர்ஜியானாவால் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனை எப்படி மறக்க முடியும் தனது குடும்பத்தை மட்டும் அல்ல தான் வாழ்ந்த கிராமத்தையே அழித்தவன் ஆயிற்றே அவன். அப்படிப் பட்டவன் எந்த ரூபத்தில் வந்தாலும் அவளால் அடையாளம் கண்டு விட முடியுமே! அந்த வகையில் தான் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனை மெர்ஜியானா அடையாளம் கண்டாள். இருந்தும் அதனை வெளியில் அப்போதைக்கு காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவனுக்கு உணவு பரிமாறினாள். அத்துடன் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனை எப்படித் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று தனது மனதிற்குள் சிந்தித்துக் கொண்டு இருக்க அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனும் அலிபாபாவை எப்படித் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

இந்நிலையில் மெர்ஜியானா வேகமாக உணவு உண்டு முடித்ததும் ஆடும் பெண்கள் அணிவது போன்ற அழகிய உடையை அவசர அவசரமாக உடுத்திக் கொண்டாள். நல்ல விலை உயர்ந்த மெல்லிய கைக் குட்டை ஒன்றை எடுத்து முகத்தை மூடிக் கொண்டாள். அவளது தலையில் ஒரு அழாகான தலைப் பாகையை சூடிக் கொண்டாள். பொன்னாலும், வெள்ளியாலும், வைரத்தாலும் அழகு செய்யப்பட இடைப்பட்டியில் ஒரு அருமையான கூறிய கத்தியை வைத்துக் கொண்டாள். பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த அப்துல்லாவிடம் "தாங்கள் உடனே சென்று ஜால்ராவை கொண்டு வாருங்கள். ஆடிப் பாடி விருந்துக்கு வந்தவரை மகிழ்விப்போம்" என்றாள்.

அப்துல்லாவும் ஓடிச் சென்று ஜால்ராவை எடுத்து வந்தான். அதன் பிறகு  அப்துல்லாவும், மெர்ஜியானாவும் அலிபாபாவிடம் விருந்தினரை மகிழ்விக்க ஆடிப் பாட நினைக்கிறோம் என்று கூற. அலிபாபாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதற்கு சம்மதம் தெரிவித்தான்.

அதனைக் கேட்ட மாத்திரத்தில் "நல்ல பொழுது போக்காக இருக்கும் போலிருக்கிறதே" என்று கூறி மாறுவேடத்தில் இருந்த கொள்ளையனும் மகிழ்ச்சி அடைந்தான். இந்நிலையில் மெர்ஜியானா ஆடத் தொடங்கினாள். அப்போது தான் அலிபாபாவுக்கே ஒரு விஷயம் புரிந்தது அதாவது மெர்ஜியானா அறிவில் மட்டும் அல்ல ஆடல் பாடலிலும் சிறந்தவள் என்று. அப்படி அருமையாக ஆடினாள் மெர்ஜியானா. அதற்குத் தகுந்தபடி அப்துல்லா ஜால்ரா அடித்துக் கொண்டு இருந்தான். மெர்ஜியானா அவர்கள் இருவரின் எதிரில் செல்வதும் வருவதுமாக இருந்தாள். அத்துடன் அவர்களிடம் ஆடிக் கொண்டே அன்பளிப்பு வாங்குவதற்குப் போய் நின்றாள். முதலில் அலிபாபா ஒரு பொற்காசைக் கொடுத்தான். பின்னர் அவனுடைய அண்ணனின் மகன் ஒரு பொற்காசை எடுத்து மெர்ஜியானாவுக்குக் கொடுத்தான். அந்த இரண்டு பொற் காசுகளையும் வாங்கி அப்துல்லாவிடம் கொடுத்து விட்டுப் புன்னகையுடன் திருடர்களின் தலைவனிடமும் போய் நின்றாள். அந்தத் திருடர்களின் தலைவன் மெல்லக் குனிந்து பணப் பையை எடுக்க முற்பட்ட சமயத்தில் அந்த சந்தர்ப்பத்துக்காகத் தான் மெர்ஜியானாவும் காத்துக் கொண்டு இருந்தாள். கொள்ளைக் காரனின் தலைவன் குனிந்து பணப் பையை எடுக்கும் நேரத்தில் தனது இடையில் இருந்த கத்தியை எடுத்து அவனது கழுத்தில் ஆழமாகப் பாய்ச்சி விட்டாள். அடுத்த கணம் அந்தக் கொள்ளைக்காரத் தலைவன் அலறித் துடித்தபடி கீழே விழுந்து மாண்டான்.

இந்தக் காட்சியைக் கண்ட அலிபாபா அதிர்ந்து போனான். அவன் மெர்ஜியானாவிடம்," மெர்ஜியானா! நீ என்ன செய்து விட்டாய். நமது விருந்தாளியை நீ கொன்று விட்டது சரியா? ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்டான். காசிமின் மகனும் கூட மெர்ஜியானா மீது ஆத்திரம் கொண்டான்.

உடனே மெர்ஜியானா அலிபாபாவிடமும், காசிமின் மகனிடமும் இவ்வாறு உண்மையை எடுத்துச் சொன்னாள்.

"இவன் முதலில் நீங்கள் எல்லோரும் நினைப்பது போல இரத்தின வியாபாரியே இல்லை. இவன் கொள்ளைக் காரர்களின் தலைவன். எனது எஜமானரான காசிமைக் கொன்றவன். இப்போது அலிபாபாவையும் கொல்ல மாறுவேடத்தில் வந்து உள்ளான். இதோ இவன் ஒளித்து வைத்திருந்த இவனது குறு வாள்" என்று கூறியபடி அந்தக் கொள்ளைக்காரன் மறைத்து வைத்திருந்த குறு வாளை அலிபாபாவிடம் எடுத்துக் கொடுத்தாள். அத்துடன் அந்தக் கொள்ளையனின் மாறு வேடத்தையும் கலைத்தாள். அப்போது தான் அலிபாபாவிற்கு அனைத்து உண்மைகளும் புரிந்தது. "ஆம்! மெர்ஜியானா உண்மை தான் இவன் தான் அன்றும் எண்ணெய் வியாபாரி என்று நம்மிடம் பொய் சொல்லி வந்தவன். எனக்கு இப்போது தான் இவனது முகம் நினைவுக்கு வருகிறது" என்று கூறினான் அலிபாபா.

அத்துடன் தன்னைப் பேர் ஆபத்தில் இருந்து காத்த மெர்ஜியானாவை புகழ்ந்து உரைத்தான் அலிபாபா.

பின்னர் தனது அண்ணன் மகனிடம்,"மெர்ஜியானாவைப் போன்ற அறிவும், திறமையும், துணிவும், பணிவும், பண்பும், ஒழுக்கமும், நல்ல அன்பும் கொண்ட பெண்ணை இந்த உலகத்தில் நீ பார்க்கவே முடியாது. இவள் பலமுறை ஆபத்துக் காலங்களில் இருந்து நம்மைக் காத்தவள். அப்படிப் பட்ட இவளை நீ ஏன் மணந்து கொள்ளக் கூடாது? அப்படி நீ இவளை மணந்து கொண்டால் நிச்சயம் வாழ்வில் முன்னேற்றம் அடைவாய்" என்று கூறவும். அவன் மகிழ்ச்சியுடன் மெர்ஜியானாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டான். அத்துடன் அவனும் மெர்ஜியானாவை புகழ்ந்து உரைத்தான். அத்துடன்," இனி மற்றவர்களுடன் பழகும் போது எப்போதுமே எச்சரிக்கையுடன் பழகுவேன்" என்றும் அலிபாபாவிடம் அவனது அண்ணனின் மகன் கூறினான்.

அதன் பின்னர் அந்தக் கொடியவனின் உடலை யாருக்கும் தெரியாமல் பத்திரமாக எடுத்துச் சென்று அவனது சகாக்களை புதைத்த இடத்திற்கு பக்கத்திலேயே ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். அப்போது மெர்ஜியானா அலிபாபாவிடம்," இனிமேல் தாங்கள் எங்கு வேண்டும் என்றாலும் சென்று வரலாம். தங்களுக்கு வந்த ஆபத்து இன்றுடன் நீங்கி விட்டது" என்று கூற,

"ஆம் மெர்ஜியானா! நீ சொல்வது முற்றிலும் உண்மை தான்" என்று கூறி அலிபாபா மகிழ்ந்தான். அப்போது அங்கு இருந்த அனைவரின் முகத்திலுமே ஒரு மகிழ்ச்சிப் பெருக்கு காணப்பட்டது. அப்போது முதல் அலிபாபாவிற்கு அனைத்தும் நன்மையாகத் தான் நடந்தது. இதற்குள் காசிம் இறந்து ஐம்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. காசிமின் மனைவி சிறிது, சிறிதாக தனது கணவன் இறந்த சோகத்தை மறந்தாள். அவளுக்குள் இருந்த ஆடம்பரம், அகம்பாவம் என அனைத்துமே காசிமுடனேயே மறித்து விட்டது. மறுபுறம் அந்த சோக சூழ்நிலையை ஆனந்தமாக மாற்ற அலிபாபா தானே முன்னிருந்து தனது அண்ணன் மகனுக்கு மெர்ஜியானாவைத் திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தான். தனது வீட்டில் வேலை பார்த்த பணிப் பெண் என்றெல்லாம் பார்க்காமல் மெர்ஜியானாவை சந்தோஷமாக வரவேற்றாள் காசிமின் மனைவி. அத்துடன் அவளைத் தனது மகளாகவே பாவித்தாள். அன்புடன் பழகினாள்.

நாளடைவில் காசிமின் மகன் வியாபாரத்தை நல்ல முறையில் நடத்திப் பெரும் லாபத்தை சம்பாதித்தான். அதனால் காசிமின் கடை பெரிய கடையாக மாற்றப்பட்டது. மெர்ஜியானாவும் காசிமின் மகனை மணந்து கொண்டு இல்லறத்தில் வாழ்ந்து சந்தோஷமாக அவன் சந்ததியை பெருக்கினாள்.

காசிமின் பிணத்தைத் தூக்கி வந்ததில் இருந்து அலிபாபா பயந்தவனாய் அந்தக் குகைக்குப் போகவே இல்லை. ஆனால், அந்தத் திருடர்களின் கூட்டத்தில் இருந்த அத்தனை பேர்களும் மடிந்த பின்னர். துணிச்சலுடன் அலிபாபா அந்தக் குகைக்குள் சென்று வந்தான். அத்துடன் வேண்டிய மட்டும் பொற் காசுகளை அவன் கொண்டு வந்தான். அத்துடன் அலிபாபாவின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கூட அந்தக் குகையின் ரகசியம் பற்றி அனைத்தும் சொல்லித் தரப்பட்டது. அதனால், அவன் சந்ததியே செழித்து விளங்கியது. பத்து தலைமுறையாக தாரளாமாக செலவு செய்தும் கூட அந்தச் செல்வங்கள் குகைக்குள் குறையவே இல்லை என்பது அலிபாபாவின் வம்சத்தினரை ஆச்சர்யப்படுத்தியது.