மிதிலைக் காட்சிப் படலம் - 710

bookmark

710.

ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்.
பாகுபோல் மொழிப் பைந்தொடி. கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!
 
ஆகும் -  ஆக்கத்திற்குரிய; நல்வழி அல்வழி - நல்வழி அல்லாத
தீய  நெறி;  என்மனம்  ஆகுமோ  -  எனது  நேர்மையான மனம்
செல்லுமோ?; அதற்கு ஆகிய காரணம் - (அப்படியிருக்க என் மனம்
இம்   மங்கையிடம்   காதல்  கொண்டு  சென்றதற்குப்)   பொருந்திய
காரணம்;  பாகுபோல் மொழி  - பாகுபோன்ற இனிய சொற்களையும்;
பைந்தொடி   -   பசும்பொன்   தொடியையும்  உடைய  இந்நங்கை;
கன்னியே   கும் - (திருமணமாகாத) கன்னிகையே ஆவாள்; இதற்கு
வேறு   ஐயுறவு  இல்லை  -  (இந்த  முடிவுக்கு  மாறாக)  ஐயப்பட
வேண்டியது ஒன்றுமில்லை.   

தனது     மனம்    அம்   மங்கையிடம்   சென்றதால்   அவள்
திருமணமாகாத  கன்னிப் பெண்ணாக இருக்கவேண்டுமென்று  இராமன்
கருதுகின்றான்.   சான்றோர்க்குத்   தூய  மனச்சான்றே  அளவுகோல்.
நல்வழியல்லாத அல்வழி: பிறன் மனைவியை விழைதல்.          147