மிதிலைக் காட்சிப் படலம் - 703
சீதையின் உருவெளிப்பாடுகண்டு இராமபிரான்
தன்னுட்கூறுதல் (703-710)
சீதையின் உருவெளிப்பாடு கண்ட இராமனின் நிலை
703.
‘விண்ணின் நீங்கிய மின் உரு. இம் முறை.
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ?
எண்ணின். ஈது அலது என்று அறியேன்; இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்.
விண்ணின் நீங்கிய - மேகத்திலிருந்து நீங்கின; மின்உரு -
மின்னலின் வடிவம்; இம்முறை - இவ்வாறு; பெண்ணின் நல்நலம் -
பெண்ணின் பேரழகை; பெற்றது - அடைந்துள்ள தன்மை; உண்டே
கொலோ-உண்டோ?; எண்ணின்-ஆராய்ந்து பார்த்தால்; ஈது அலது
ஒன்று அறியேன் - (என் கண்ணிற்குப் புலப்படுகின்ற) இந்தப்
பெண் வடிவம் கொண்டு வந்தது வேறு அன்று என்று சொல்வதற்கு
இல்லை (ஏனென்றால்); கண்ணினுள்ளும் - (இந்த வடிவத்தை)
கண்களிலும்; கருத்துளும் - மனத்துள்ளும்; காண்பென் - (நான்)
காண்கிறேன்.
சீதையின் உருவம் அடுத்தடுத்துத் தோன்றியும் மறைந்தும்
நிகழ்வதற்கு மின்னல் உருவம் ஏற்புடைத்தால் அறியத் தகும்.
புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் காண்கின்றேன் என்பதைக்
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பேன் எனக் குறித்தார்.
காண்பென்: கால வழுவமைதி. 140
