மிதிலைக் காட்சிப் படலம் - 704

bookmark

704.

வள்ளல் சேக்கைக் கரியவன் வைகுறும்
வெள்ளப் பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள்.
அள்ளல் பூமகள் ஆகும்கொலோ- எனது
உள்ளத் தாமரையுள் உறைகின்றதே?
 
வள்ளல்     சேக்கை- வரையாது கொடுக்கும் தன்மை   கொண்ட
(ஆதிசேடனை)  படுக்கையாகக் கொண்ட; கரியவன் -  கரிய நிறமுள்ள
திருமால்; வைகுறும் - பள்ளி கொள்ளும்; வெள்ளம் -  வெள்ளமாகிய;
பாற்கடல்போல் - திருப்பாற்கடலைப்போல;  மிளிர் -  விளங்குகின்ற;
கண்ணினாள்  கண்களையுடைய பெண்; எனது உள்ளத்  தாமரையுள்
-   என்  இதயமாகிய  தாமரையில்;  உரைகின்றதால் -   வசிக்கின்ற
காரணத்தால்;  அள்ளல்பூமகல்  -  செந்தாமரை மலரில் (எப்போதும்)
வாழ்கின்ற திருமகள்; ஆகும் கொலோ - ஆவாளோ?   

பாற்கடலில்  பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டருளும்  திருமால்
-  வெண்ணிறமுள்ள  கண்ணின்  கருநிறக்  கண்மணியில்   தோன்றும்
பாவை.  திருமாலின்  திருமேனி  நிறச் சிறப்பால் கறுத்துத்  தோன்றும்
சேடனாகிய  பாம்பு  -  பாவையைத்  தன்னுள்ளே    கொண்டிருக்கும்
கருவிழி.   பாற்கடல்   வெள்ளம்   -   கருமணியைச்    சூழ்ந்துள்ள
வெண்ணிறப் பரப்பு.                                       141