மிதிலைக் காட்சிப் படலம் - 700
கோசிகன் வரலாற்றைச் சதானந்தர் முடித்தல்
சதானந்தர் குமரர்களை வாழ்த்திப் பெயர்தல்
700.
‘ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை;
நீதி வித்தகன்தன் அருள் நேர்ந்தனிர்;
யாது உமக்கு அரிது?’ என்றனன். ஈறு இலான்.
முன்னர்- முன்னே; நிகழ்ந்தது ஈறு - நடந்த வரலாறு இதுவாம்;
இவன் துணை - இந்தக் கௌசிகனுக்கு ஒப்பாக; மா தவத்து உயர்
- பெருந்தவத்தால் உயர்ந்த; மாண்பு உடையார்- மாட்சிமையுடையவர்;
இலை - வேறு யாரும் இல்லை; நீதி வித்தகன்தன் - நியம நீதி
தவறாதவனும் மெய்யுணர்வுடையவனும் ஆகிய இம் முனிவனது;
அருள் நேர்ந்தனிர் - கருணையை நீங்கள் பெற்றுள்ளீர்கள்; உமக்கு
அரிது யாது - (ஆதலால்) உங்களுக்குச் செய்வதற்கு அரிய செயல்
யாது உள்ளது; என்றனன் - என்று (இராம இலக்குவர்களை நோக்கிச்)
சொல்லி முடித்தான்; ஈறு இலான் - (சொன்னவன் யாரென்றால்)
எல்லையில்லாத நற்குணத்தவனான சதானந்த முனிவன்.
ஈறு இலான்: ஆனந்தத்திற்கு முடிவு இல்லாதவன் என்பர். 137
