மிதிலைக் காட்சிப் படலம் - 698
தேவர்கள் கோசிகனை நீ பிரமவிருடியாவாய் எனல்
698.
‘பாதி மா மதி சூடியும். பைந் துழாய்ச்
சோதியோனும். அத் தூய் மலராளியும்.
“வேத பாரகர்” வேறு இலர். நீ அலால்;
மா தபோதன!” என்ன வழங்கினர்.
மா பாதி மதி சூடியும் - கலை குறைந்த சிறந்த பிறைச்
சந்திரனைத் சூடிய சிவனும்; பைந்துழாய் - பசுமையான திருத்துழாய்
அணிந்த; சோதியோனும் - சோதியான திருமாலும்; அத் தூய்மலர்
ஆளியும் - தூய தாமரை மலரில் உறையும் பிரமனும் (ஆகிய
மும்மூர்த்திகளும்); மா தபோதன - (அம் முனிவனை நோக்கி) சிறந்த
தவச் செல்வனான பெருமுனிவனே; வேத பாரகர் - வேதங்களின்
கரை கண்டு உணர்ந்தவர்; நீ அலால் வேறு இலர் - உன்னை
அல்லாமல் (உலகில்) வேறு யாரும் இலர்; என்ன வழங்கினர்- என்று
உபகார மொழி கூறிப் புகழ்ந்தார்கள்.
‘வேத பாரகனும் மா தபோதனனும் நீயே’ என்றதனால் ‘பிரம
இருடியே நீ’ என்பது விளங்கும். திருமகள் வாழும் இடமாதலின்
தாமரை மலர் தூய்மலர் எனப்பட்டது. 135
