மிதிலைக் காட்சிப் படலம் - 696

bookmark

கோசிகன் தவத்தால் உலகத்துத் தோன்றிய மாறுபாடு

696.

‘திரிவ நிற்ப செக தலத்து யாவையும்.
வெருவலுற்றன; வெங் கதிர் மீண்டன;
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட. உம்பர் துளங்கினார்.
 
கருவி- உலகமும் உலகத்து உயிர்களும் வாழ்வதற்குக்  காரணமான
மேகங்கள்; உற்ற  -  நிறைந்துள்ள; ககனம் எலாம் - விண் முழுதும்;
புகை - புகையானது; உருவி உற்றிட - ஊடுருவிச் சென்றதால்; செகம்
தலத்து -  பூமியில்;  திரிவ  -  சஞ்சரிக்கும் பொருள்களும்; நிற்ப -
நிலை  நிற்கும் அசையாப்  பொருள்களும்;  யாவையும்  -  (ஆகிய)
எல்லாப் பொருள்களும்; வெருவல் உற்றன - அச்சத்தை அடைந்தன;
வெம் கதிர் -  கொடிய வெப்பமான சூரியக் கதிர்களும்; மீண்டன -
(ஒளி வீசாமல்) திரும்பிவிட்டன; உம்பர் - தேவர்களும்; துளங்கினார்
- (அச்சத்தால்) நடுக்கமுற்றார்கள்.   

கருவி: இடி. மின்னல் முதலிய தொகுதி.                   133