மிதிலைக் காட்சிப் படலம் - 697
தேவர்கள் கோசிகனைச் சந்தித்தல்
697.
‘புண்டரீகனும். புள் திருப் பாகனும்.
குண்டை ஊர்தி. குலிசியும். மற்று உள
அண்டர்தாமும். வந்து. அவ் வயின் எய்தி. வேறு
எண் தபோதனன்தன்னை எதிர்ந்தனர்.
புண்டரீகனும் - தாமரையில் வாழும் பிரமனும்; புள் திருப்
பாகனும் - கருடனுக்குச் சிறந்த பாகனாகிய திருமாலும்; குண்டை
ஊர்தி(யும்) - காளை வாகனத்தையுடைய சிவனும்; குசிலியும்
- வச்சிரப் படையுடைய இந்திரனும்; மற்று உள அண்டர்தாமும் -
மற்றுமுள்ள தேவர்களும்; வேறு வந்து அவ்வயின் எய்தி - தனித்
தனியாக வந்து அவ்விடத்தில் சேர்ந்து; எண் தபோதனன் தன்னை
- யாவராலும் மதிக்கப்படும் தவச் செல்வனான முனிவனை;
எதிர்ந்தனர் - சந்தித்தார்கள்.
படைத்தல். காத்தல். அழித்தல் என்னும் தொழில்களின்
முறைமைப்படி பிரமன். திருமால். சிவன் என்று வைத்தார். புள் -
பறவைக்கு அரசாகிய கருடன். குண்டை ஊர்தி -
பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 134
