மிதிலைக் காட்சிப் படலம் - 695

bookmark

695.

‘தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற.
நிமிர்ந்த வெங் கதிர்க் கற்றையும் நீங்குற.
கமந்த மாதிரக் காவலர் கண்ணொடும்.
சுமந்த நாகமும். கண் சும்புளித்தவே.
 
தமம் -   இருளானது;  திரண்டு  -  மிகுதியாக ஒருங்கு  சேர்ந்து;
உலகு  யாவையும்  -   உலகங்கள்  எல்லாம்;  தாவுற - பரவி நிற்க
(அதனால்); நிமிர்ந்த வெம்கதிர் - சூரியனது வெப்பமான  கதிர்களின்;
கற்றையும்  நீங்குற   -   தொகுதியும்   மறைந்து   போக;  கமந்து
மாதிரக் காவலர் - வானுலகில்   நிறைந்த   திக்குப்   பாலகர்களின்;
கண்ணொடும்  - கண்களுடன்; சுமந்த நாகக் கண்ணும்  - பூமியைத்
தாங்கும் திக்கு யானைகளின் கண்களும்; சும்புளித்தவே - கூசின.

கமந்த: ‘கமம்’ என்ற உரிச்சொல்லின் வினை விகற்பமாகும். (தொல்.
உரி.59)   சும்புளித்தல்:  மாதிரக்  காவலர்:  கிழக்கு-இந்திரன்.  தென்
கிழக்கு  - அக்கினி. தெற்கு - இயமன். தென்மேற்கு-நிருதி.  மேற்கு -
வருணன்.  வடமேற்கு  -  வாயு.  வடக்கு  -  குபேரன். வடகிழக்கு -
ஈசானன்.                                                132