மிதிலைக் காட்சிப் படலம் - 693

bookmark

கோசிகன் தவத்தால் எல்லா உலகும் சலித்தல்

கௌசிகன் தவ மகிமை

693.    

வடா திசை முனியும் நண்ணி.
   மலர்க் கரம் நாசி வைத்து. ஆங்கு.
இடாவு பிங்கலையால் நைய.
   இதயத்தூடு எழுந்து ஒன்று எண்ணி.
விடாது பல் பருவம் நிற்ப.
   மூல மா முகடு விண்டு.
தடாது இருள் படலை மூட.
   சலித்தது எத் தலமும். தாவி.
 
முனியும்   - கோசிக முனிவனும்; வடாதிசை நண்ணி - வடக்குத்
திக்கை  அடைந்து;  ஆங்கு  -  அவ்விடத்தில்;  மலர்க்கரம்  நாசி
வைத்து -  தாமரை  போன்ற  கையின்  விரல்களை  மூக்கின் மேல்
வைத்து;    இடாவு     பிங்கலையால்  நைய - இடைகலையானது 
பிங்கலையோடு அடங்கும்படி  (பிராணாயாமம் செய்து); இதயத்து ஊடு
எழுத்து ஒன்று -  மனத்திலே  பிரணவ  மகாமந்திரத்தை;  எண்ணி
-  தியானித்துக் கொண்டு;  பல்பருவம்  -  பல  ஆண்டுகள்  வரை;
விடாது நிற்ப -(தவத்தில்) நிலைத்து நிற்க; மூலம் மா முகடு விண்டு
- (அப்பொழுது) மூலாக்கினியால்  (அவனது) பெரிய காபலம் வெடித்து
விரிந்து; இருள் படலை - (அதிலிருந்து) இருளின் கூட்டத்தையொத்த
புகை மண்டலம்; தடாது -  தடுக்கப்படாமல்;  தாவி -  மேல் எழுந்து;
மூட - எங்கும் கவிந்து நின்ற அளவிலே; எத்தலமும் - எல்லாவுலகும்;
சலித்தது - சலிப்புற்றன.   

இடைகலை    என்னும் நாடியிலிருந்து இட மூக்கால் விடும் மூச்சுக்
காற்றை   இடைகலை  என்றும்.  பிங்களை  என்னும்   நாடியிலிருந்து
வலமூக்கால்   விடும்  மூச்சுக்  காற்றை  பிங்கலை  என்றும்.   இவை
பிராணாயாமம்   செய்யும்   போது   நிகழ்வன   என்றும்    கூறுவர்.
இருள்படலை:   இருளின்   தொகுதி.   இடை   பிங்கலை   என்பன:
தசநாடிகளில் சேர்ந்தவை. முகடு: தலையோட்டின் உச்சி.          130