மிதிலைக் காட்சிப் படலம் - 694
கோசிகன் தவக்கனலால் புகை விம்முதல் (694-695)
கலிவிருத்தம்
694.
‘எயில் எரித்தவன் யானை உரித்த நாள்.
பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என.
புயல் விரித்து எழுந்தாலென. பூதலம்
குயிலுறுத்தி. கொழும் புகை விம்மவே.
எயில் எரித்தவன் - திரிபுரத்தை எரித்தவன் சிவன்;
யானை உரித்த நாள் - யானையை உரித்த காலத்தில்; பயில்
உறுத்தி - (உடலோடு) செறியச் செய்து; உரி போர்த்த -
அந்த யானைத் தோலை மேலே போர்த்துக் கொண்ட; நல்பண்பு
என -நல்ல தன்மை போலவும்; புயல் - மேகங்கள்; விரித்து
எழுந்தால் என - எங்கும் பரவி எழுந்தது போலவும்; பூதலம்
குயிலுறுத்தி - பூமி முழுவதையும் நெருங்கச் சய்து; கொழும்
புகை - அந்த மூலாக்கினியின புகையானது; விம்ம - மிகுதியாக.
புகை எங்கும் பரவுதல்: சிவன் யானையை உரித்து அதன்
தோலைப் போர்த்தது போல - பூமியில் எங்கும் கருமேகம் விரிந்து
எழுந்தது போல இருந்தது எனல். எயில்: பட்டணத்தைக் குறிக்கும் -
ஆகுபெயர். 131
