மிதிலைக் காட்சிப் படலம் - 692

bookmark

அம்பரீடன் வேள்வி முடிதலும் கோசிகமுனிவன்
வடதிசை செல்லுதலும்

வேள்வி முற்றலும் கௌசிகன் வடதிசை ஏகலும் 
 
692.

‘மறை முனி உரைத்த வண்ணம்
   மகத்து உறை மைந்தன் ஆய.
சிறை உறு கலுழன். அன்னம்.
   சே. முதல் பிறவும் ஊரும்
இறைவர் தொக்கு அமரர் சூழ.
   இளவல்தன் உயிரும். வேந்தன்
முறை தரு மகமும். காத்தார்;
   வடதிசை முனியும் சென்றான்.
 
மறைமுனி        -   வேதங்களையறிந்த   கோசிக   முனிவன்;
உரைத்தவண்ணம் -  கூறியபடியே;  மைந்தன்  -  அந்தக் குமாரன்;
மகத்து  உரை-   யாகம்   செய்யும்  இடத்தில்  (தியானிக்க);  சிறை
உறுகலுழன்  -   வலிமையான  சிறகுள்ள  கருடனும்;  அன்னம்  -
அன்னமும்;  சே -  காளையும்;  முதல்  பிறவும்  -  முதலிய  பிற
ஊர்திகளையும்;  ஊரும்  -  ஏறி  நடத்தும்;  இறைவர்  - (திருமால்.
பிரமன்.  சிவன்  முதலிய)  தலைமைத்  தேவர்கள்;  அமரர்  சூழ -
மற்றைத்  தேவர்கள்  தம்மைச்  சூழ்ந்து  வரும்படி; தொக்கு - (அவ்
வேள்விச்  சாலைக்கு) திரண்டு  வந்து; இளவல்தன் உயிரும் - அந்த
இளைஞனது  உயிரையும்;  முறைதரு - வேதமுறைப்படி செய்யப்படும்;
வேந்தன்   மகமும்  -   அவ்வரசனது  யாகத்தையும்;  காத்தார் -
(அழியாதவாறு)   பாதுகாத்தார்;   முனியும்  -  கோசிக  முனிவனும்;
வடதிசை சென்றான் - (மேற்குத் திசையில் தனது தவம் முடியாததால்)
வடதிசை நோக்கி போனான்.   

ஊர்திகள்; இந்திரனுக்கு    -   வெள்ளை   யானை.   அக்கினிக்
கடவுளுக்கு - ஆட்டுக்கடா. இயமனுக்கு - எருமைக்கடா.         129