மிதிலைக் காட்சிப் படலம் - 691
சுனச்சேபனுக்குக் கோசிகன் விடைகொடுத்தல்
691.
“அரசனோடு ஏகி யூபத்து
அணைக்குபு இம் மறையை ஓதின்.
விரசுவர் விண்ணுளோரும்
விரிஞ்சனும் விடைவலோனும்;
உரை செறி வேள்வி முற்றும்;
உனது உயிர்க்கு ஈறு உண்டாகா;
பிரசமென் தாரோய்!” என்ன.
பழிச்சொடும் பெயர்ந்து போனான்.
பிரசம் மென் தாரோய்- தேனுடைய மென்மையான பூமாலை
தரித்தவனே; அரசனோடு ஏகி - அம்பரீட மன்னனோடு சென்று;
யூபத்து அணைக்குபு - (அவன்) யூபத் தூணிலே கட்டும் போது; இம்
மறையை ஓதின் - இந்த மந்திரங்களைச் சொன்னால்;
விண்ணுளோரும் - தேவர்களும்; விரிஞ்சனும் - பிரமனும்;
விடைவலோனும் - காலை ஊர்தியான சிவபிரானும்; விரசுவர் -
(தத்தம் அவிர்ப் பாகத்தை பெற) வந்து சேர்வார்கள்; உரை செறி -
புகழ் மிக்க; வேள்வி முற்றும் - யாகமும் நிறைவுறும்; உனது
உயிர்க்கு -உன் உயிர்க்கும்; ஈறு உண்டாகா - இறுதி உண்டாகாது;
என்ன -என்று (தன் மருமகனிடம்) சொல்ல; பழிச்சொடும் - (அது
கேட்டு அவன்) வணங்கித் துதிமொழிகள் கூறியவனாக; பெயர்ந்து
போனான்- (அவ்விடத்தை விட்டு) நீங்கி அரசனோடு சென்றான்.
அணைக்குபு: அணைக்க; அரசன் முனி மைந்தனைச் சந்தனம்.
மாலை முதலியவற்றால் அலங்கரித்து நரமேத்திற்காக அழைத்துச்
சென்றானாதலால் கோசிகன் அவைனைப் ‘பிரசம் மென் தாரோய்’ என
விளித்தான். யூபம்: யாகப் பசுவைக் கட்டும் தூண். இரண்டு
மந்திரங்கள் 1. பலியை உண்பவனாகிய இந்திரனைத் துதிப்பது. 2.
யூபத் தூணின் தேவதையான உபேந்திரனைத் துதிப்பது. 128
