மிதிலைக் காட்சிப் படலம் - 688

bookmark

கோசிகன் சுனச்சேபனுக்குப் பிரதியாகத் தன் மக்களில்
ஒருவனைச் செல்லுமாறு கூறல்

கோசிகன் அவனுக்குப் பதில் தன் மக்களுள்
ஒருவரை ஏகுமாறு சொல்ல அவர் மறுத்தல்
 
688.

‘மைத்துனனோடு முன்னோள்
   வழங்கிய முறைமை கேளா.
“தத்துறல் ஒழி நீ; யானே
   தடுப்பென். நின் உயிரை” என்னா.
புத்திரர் தம்மை நோக்கி.
   “போக வேந்தோடும்” என்ன.
அத் தகு முனிவன் கூற.
   அவர் மறுத்து அகறல் காணா.
 
முன்னோள்   - (தனக்கு) முன் பிறந்தவளும்;  மைத்துனனோடு -
(அவள்   கணவனாகிய   மைத்துனன்)    ரிசிகனும்;   வழங்கிய   -
(பிள்ளையை)  விலைக்குக்  கொடுத்துவிட்ட;  முறைமை - செய்கையை;
கேளா - கேட்டு; அத் தகு முனிவன் -  தக்கவனாகிய  அம்முனிவன்;
நீ - (சுனச்சேபனை நோக்கி) நீ;  தத்துறல்   ஒழி  - அச்சப்படுவதை
நீக்குவாயாக;  யானே   நின்     உயிரை - நானே உனது உயிரை;
தடுப்பேன்     என்னா- காப்பேன் என்று கூறி;    புத்திரர்தம்மை
நோக்கி  - தன் மைந்தர்களைப்  பார்த்து;   வேந்தொடும் போக -
(உங்களில்  ஒருவன்)  இந்த அரசனுடன் (நரமேதத்திற்காக  இவனுக்கு
ஈடாகச்)  செல்லுக; என்னா கூற  -  என்று சொல்ல; அவர் மறுத்து
அகறல் - அம் மக்கள் அனைவரும் கட்டளையை மறுத்து நீக்குதலை;
காணா - கண்டு.  

பெற்றோரால்    கைவிடப்பட்ட தன் மருமகனுக்கு அபயம் அளித்து
என்  மக்களில்  யாரேனும் ஒருவன் இவனுக்குாகச் செல்லுக  என்றான்
முனிவன்;ஆனால் அதற்கு ஒருவனும் உடன்படவில்லை.         125