மிதிலைக் காட்சிப் படலம் - 689
மறுத்த மைந்தர்களைக் கோசிகன் சபித்தல்
689.
‘எழும் கதிரவனும் நாணச்
சிவந்தனன் இரு கண்; நெஞ்சம்
புழுங்கினன்; வடவை தீய
மயிர்ப்புறம் பொறியின் துள்ள.
அழுங்கல் இல் சிந்தையீர்! நீர்
அடவிகள்தோறும் சென்றே.
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி.
உறு துயர் உறுக!’ என்றான்.
எழும் கதிரவனும் - உதிக்கும் சூரியனும்; நாண - வெட்கம்
அடையும்படி; இருகண் சிவந்தனன் - (தன்னுடைய) இரண்டு
கண்களும் செந்நிறம் டைந்து; நெஞ்சம் புழுங்கினன் - மனம்
தவித்தவனாய்; வடவை தீய - வடவைத் தீயும் தீய்ந்து போகுமாறு;
மயிர்ப்புறம் பொறியின் - எனது உடம்பின் உரோமத் துவாரங்கள்;
துள்ள - தீப்பொறிகளை வெளியிட; அழுங்கல் இல் - (கோசிகன் தன்
மைந்தர்களைப் பார்த்து) இரக்கம் இல்லாத; சிந்தையீர் - மனம்
உடையவர்களே!; நீர் அடவிகள்தோறும் - நீங்கள் காடுகள் எங்கும்;
சென்று - திரிந்து; ஒழுங்கு அறு -நாகரிகம் இல்லாத; புளிஞர் ஆகி
- வேடர்களாய்; உறு துயர் உறுக - மிக்க துன்பத்தை அடைவீராக;
என்றான் - என்று சபித்தான்.
கதிரவன் நாணுதல்: கோசிகன் கண்களின் செந்நிறம் தனது கதிர்
மண்டலத்தில் செந்நிறத்தைக் காட்டிலும் மிக்கிருத்தல்: அவனது
கோபம் தனது கதிர்களின் வெப்பத்தை விடக் கூடியிருத்தல். வடவை
- வடவாமுகாக்கினி. 126
