மிதிலைக் காட்சிப் படலம் - 684
அம்பரீடற்கு ரிசீகன் மகற்கொடை நேர்தல்
684.
‘நல் தவ ரிசிகன் வைகும்
நனை வரும் பழுவம் நண்ணி.
கொற்றவன் வினவலோடும்.
இசைந்தனர்; குமரர்தம்முள்
பெற்றவள். “இளவல் எற்கே”
என்றனள். பிதா. “முன்” என்றான்;
மற்யை மைந்தன் நக்கு.
மன்னவன்தன்னை நோக்கி.
கொற்றவன் - (அவ்வாறு சென்ற) அம்பரீடன்; நல் தவம் ரிசிகன்
- சிறந்த தவ முனிவனான ரிசிகன்; வைகும் நனைவரும் - வசிக்கும்
அரும்பு மலரும்; பழுவம் நண்ணி - சோலையை அடைந்து;
வினவலோடும் - (வந்த செய்தி கூறி அவனுடைய மக்களில் ஒருவனை
விலைக்கு) கேட்ட அளவில்; இசைந்தனர் குமரர் தம்முள் - தன்
புதல்வர்களாக அமைந்த மூவருள்; இளவல் எற்கே - இளையவன்
எனக்கே உரியவன் (அவனை விற்க முடியாது); என்றனள் பெற்றவள்
- என்று சொன்னாள் தாயான ரிசிகன் மனைவி; பிதா முன் என்றான்
- தந்தையோ மூத்தவன் தனக்கே உரியவன் என்று சொன்னான்;
மற்றைய மைந்தன் - எஞ்சி நின்ற நடுப்பிள்ளை யான சுனச்சேபன்
என்பன்; நக்கு - (பெற்றோர் இருவரும் பெற்று வளர்த்த தன்னை
விலைப்படுத்தற்கு உடன்பட்டதை அறிந்து) சிரித்து; மன்னவன்
தன்னை நோக்கி - (தான்) அம்பரீட மன்னனைப் பார்த்து.
பிருகுதுங்க மலையில் தங்கியிருந்த ரிசிகளை அம்பரீடன்
கண்டான்; தன் கருத்தைத் தெரிவித்தான். தந்தையோ மூத்த மகனை
விலைக்குத் தர இயலாது என்றான்; தாயோ இளைய மைந்தனைக்
கொடுக்க முடியாது என்றாள். இது கண்டு வருந்திய நடுப்பிள்ளை தன்
குடும்பத்தின் வறுமை அகல அம்பரீடனிடம் தன் இசைவைத்
தெரிவித்தான். முன் - காலவாகு பெயர். 121
