மிதிலைக் காட்சிப் படலம் - 685

bookmark

அம்பரீடன் சுனச்சேபனைப் பெற்றுக்கொண்டு
செல்லுகையில் உச்சிப்போதாதல்

சுனச்சேபனைப் பெற்ற அம்பரீடன் வழியில் கோசிகனைக் காணல்
 
685.

“கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று.
   ஒற்கம்ஆம் விழுமம்குன்ற.
எடுத்துஎனை வளர்த்த தாதைக்கு”
   என்று அவன்-தொழுது. வேந்தன்
தடுப்ப அருந் தேரின் ஏறி.
   தடை இலாப் படர்தலோடும்.
சடர்க் கதிர்க் கடவுள் வானத்து
   உச்சி அம் சூழல் புக்கான்.
 
எனை எடுத்து வளர்த்த -என்னை எடுத்து வளர்த்த;  தாதைக்கு-
தந்தைக்கு (ரிசிகனுக்கு); ஒற்கம்ஆம்  விழுமம்  குன்ற  -  வறுமைத்
துன்பம் கெடும்படி;  வேண்டிற்று  வெறுக்கை  - (அவன்) விரும்பும்
செல்வத்தை;   கொடுத்து    அருள்   -   (எனக்கு   விலையாகக்)
கொடுத்தருள்க; என்று -  என்று  (அரசனை நோக்கிக்) கூறி;  அவன
தொழுது  -   தந்தையை வணங்கி; வேந்தன் தடுப்பரும் -அரசனது
தடுக்க இயலாத;  தேரின் ஏறி  -  இரதத்தின் மேல் ஏறிக்  கொண்டு;
தடை  இலாப் படாத்லோடும் - ஒரு தடையும் இல்லாமல் இருவரும்
செல்லுகையில்; சுடர்க் கதிர்க் கடவுள் - ஒளிவிடும் கதிர்களையுடைய
சூரியன்; வானத்து உச்சி - வானத்தின் நடுப்பகுதியாகிய;  அம் சூழல்
புக்கான் - இடத்தை அடைந்தான்.   

ஒற்கம்:  வறுமையால் உண்டான தளர்ச்சி. தன்னை இதுவரை பேணி
வளர்த்த   உதவிக்குக்   கைம்மாறாகத்  தன்னை  விற்றுச்   செல்வம்
பெறுமாறு வேண்டினான். தேரின் ஏறி: தேரின் ஏற. செயவென்  எச்சம்
செய்தெனத் திரிந்தது.                                      122