மிதிலைக் காட்சிப் படலம் - 676

bookmark

திரிசங்கு விரும்பியவாறு கோசிகன் இசைதலும்
வசிட்டகுமாரர் மறுத்தலும்

கௌசிகன் வேள்விசெய்து.
திரிசங்குவை வானுலகு ஏற்றுதல்
 
676.

“இற்றதோ?” என நக்கு. அன்னான்
   “யான் இரு வேள்வி முற்றி.
மற்று உலகு அளிப்பென்” என்னா.
   மா தவர் தம்மைக் கூவ.
சுற்றுறு முனிவர் யாரும்
   தொக்கனர்; வசிட்டன் மைந்தர்.
“கற்றிலம். அரசன் வேள்வி
   கனல் துறை புலையற்கு ஈவான்.”
 
அன்னான்     -  அதுகேட்ட  கோசிகன்;  இற்றதோ  என  -
இவ்வளவுதானா என்று இகழ்ச்சியாகச் சொல்லி; நக்கு - சிரித்து; யான்
இருவேள்வி -  நான் பெரியதொரு வேள்வியை; முற்றி - (உனக்காக)
செய்து  முடித்து; உலகு அளிப்பென்  என்னா - வான் உலகத்தைத்
(இந்த  உம்பொடு  அடைய)  தந்திடுவேன்  என்று சொல்லி; மாதவர்
தம்மைக் கூவ -  மாதவ  முனிவர்களை அழைக்க; சுற்றுறு முனிவர்
யாரும்  -  சுற்றுப்  பக்கங்களில்  உள்ள  அம்முனிவர் அனைவரும்;
தொக்கனர் -  (அங்கே  வந்து) கூடினார்கள் (அப்போது); வசிட்டன்
மைந்தர் - வசிட்ட  குமாரர்கள்;  அரசன்  புலையற்கு  -  அரசன்
ஒருவன்  சண்டாளன் ஒருவனுக்காக;  கனல்துறை  -  அக்கினியிலே;
வேள்வி -  வேள்வியை; ஈவான் - முடித்துத் தருவதை; கற்றிலம் -
(நாங்கள் எந்த நூலிலும்) படித்து அறிந்தோம் இல்லை.

மற்று     உலகு: இவ் வுலகினும் வேறாகிய உலகம்:    சுவர்க்கம்.
நூற்கொள்கைக்கு   மாறாக   அரசனான   விசுவாமித்திரன்  வேள்வி
செய்யப்   புரோகிதன்   ஆதலும்.  யாகம்  செய்யும்   தலைவனாகச்
சண்டாளன்  அமைதலும் தகாத செயல்கள் ஆதலால் வசிட்ட குமாரர்
கௌசிகன்  அழைப்பை  ஏற்கவில்லை  எனலாம். நகுதல்-வசிட்டனை
இகழ்தல் காரணமாகப் பிறந்தது.                             113