தாயுமானவர்
வாழ்க்கை வரலாறு தாயுமானவர் அவர்கள் தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். தாயுமானவர் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர், தாயார் கெஜவல்லி அம்மையார். இவர் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்தார். தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார். தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய பராபரக் கண்ணி மிகவும் புகழுடையது. நெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.
