மிதிலைக் காட்சிப் படலம் - 677
கோசிகன் வசிட்டன் மைந்தரைச் சபித்துவிட்டு
வேள்வி தொடங்கல்
677.
‘என்று உரைத்து. “யாங்கள் ஒல்லோம்”
என்றனர்; என்னப் பொங்கி.
“புன்தொழில் கிராதர் ஆகிப்
போக” எனப் புகறலோடும்.
அன்று அவர் எயினர் ஆகி.
அடவிகள்தோறும் சென்றார்;
நின்ற வேள்வியையும் முற்றி..
‘நிராசனர் வருக!’ என்றான்.
என்று உரைத்து - என்று கூறி; யாங்கள் ஒல்லோம் - ‘நாங்கள்
இச்செயலுக்கு உடன்படமாட்டோம்’; என்றனர் - என்று சொன்னார்கள்;
என்ன - என்று கூற (அதனைக் கேட்ட கௌசிகன்); பொங்கி -
கொதிப்பு அடைந்து; புன்தொழில் கிராதர் - (அவர்களைக் குறித்து)
இழிந்த செயல்புரியும் வேடர்கள்; ஆகிப்போக என - ஆகிவிடக்
கடவீர்கள் என்று; புகறலோடும் - சாபமொழி கூறிய அளவில்; அன்று
- அப்பொழுதே; அவர் - அவர்கள்; எயினர் ஆகி - வேடர்களாகி;
அடவிகள் தோறும் - காடுகள் தோறும்; சென்றார் -
போய்விட்டார்கள்; நின்று - (கோசிகனோ) தொடங்கிய செயலில்
சிறிதும் சலியாமல் நிலைநின்று; வேள்வியையும் முற்றி - வேள்வியை
முடிக்கத் தொடங்கி; நிராசனர் வருக - (ஆகுதியை உண்ணுதற்
பொருட்டு) தேவர்களே! நீவிர் வருவீர்களாக!; என்றான் - என்று
அவர்களை அழைத்தான்.
நிராசனர்: தேவர். உணவை வேண்டாதவர் என்பது பொருள். 114
