மிதிலைக் காட்சிப் படலம் - 675
திரிசங்கு கோசிகன்பால் தன்செய்தி தரெிவித்தல்
கௌசிகனிடம் திரிசங்கு தன் செய்தி தெரிவித்தல்
675.
‘கானிடைச் சிறிது வைகல்
கழித்து. ஓர் நாள். கௌசிகப்பேர்க்
கோன் இனிது உறையும் சோலை
குறுகினன்; குறுக. அன்னான்.
“ஈனன் நீயாவன்? என்னை
நேர்ந்தது. இவ் இடையில்?” என்ன.
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம்
விளம்பினன். வணங்கி. வேந்தன்.
கானிடை - வனத்திலே; சிறிது வைகல் கழித்து -
சில நாட்களைப் போக்கி; ஓர் நாள் - ஒரு நாள்; கௌசிகன்
பேர் கோன் - கௌசிகன் என்ற நாமம் பெற்ற இவ்வரசன்;
இனிது உறையும் - இனிதாகத் (தவம் செய்வது) வசிக்கிற;
சோலை குறுகினன் - சோலையைத் (திரிசங்கு நாடிச்) சேர்ந்தான்;
குறுக - அணுகிய அளவில்; அன்னான் - அக்கௌசிகன்;
ஈனன் நீ யாவன் - சண்டாளனான நீ யார்; இவ் இடையின்
நேர்ந்தது என்னை - இந்த இடத்திற்கு வந்ததன் காரணம் என்ன;
என்ன - என்று வினவ; வேந்தன் - திரிசங்கு; வணங்கி -
(கௌசிகனை) வணங்கி; மேல் நிகழ் பொருள்கள் - முன் நடந்த
செய்திகள்; எல்லாம் விளம்பினன் - அனைத்தையும் சொன்னான்.
வசிட்டனுக்குப் பகைவன் விசுவாமித்திரன் என்று கருதித் திரிசங்கு
அவ் விசுவாமித்திரனை அடைந்தான். மேல் நிகழ் பொருள்கள்:
வசிட்ட சாபம் முதலியன. 112
