மிதிலைக் காட்சிப் படலம் - 672
திரிசங்குவை வசிட்டன் சபித்தல்
672.
‘’நினக்கு ஒலாதுஆகின். ஐய!
நீள் நிலத்து யாவரேனும்
மனக்கு இனியாரை நாடி.
வகுப்பல் யான். வேள்வி” என்ன.
“சினக் கொடுந் திறலோய்! முன்னர்த்
தேசிகற் பிழைத்து. வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றர்;
நீசன் ஆய் விடுதி” என்றான்.
(திரிசங்கு வசிட்டனை நோக்கி) ஐய- தலைவனே!” நினக்கு ஒலாது
ஆகின் - (என்னை இவ்வுடம்போடு சொர்க்கம் ஏற்றும் செயல்)
உனக்கு முடியாது என்றால்; நீள் நிலத்து - பெரிய இப்பூவுலகில்;
யாவரேனும் - எவராயினும்; மனக்கு இனியாரை நாடி - என்
மனதுக்கு இசைந்தவரைத் தேடி; யான் வேள்வி வகுப்பல்-
(அவரைக் கொண்டு) எண்ணிய யாகத்தை நான் செய்வேன்; என்ன
- என்று கூற; (வசிட்டன் கோபங்கொண்டு அவனை நோக்கி);
சினம் கொடு திறலோய் - சினமும் கொடிய வலிமையும்
உடையவனே!; முன்னர்த் தேசிகன் - முன்னோர்களின் குருவினிடம்;
பிழைத்து - அபசாரப்பட்டு (அவனை நீக்கி); வேறு ஓர் நினக்கு
இதன்- உனக்கு விருப்பமானவேறொரு குருவை; நாடி நின்றாய்- (நீ)
தேடி நின்றாய்; (ஆதலால்); நீசன் ஆய் - புலையனாய்; விடுதி -
ஆகி விடுவாய்; என்றான் - என்று சபித்தான்.
பரம்பரையான ஆசிரியன் தகுந்தவனாகியிருக்க அவனை
அவமதித்து வேறொரு குருவைத் தேடுதல் முறைகேடானது. இதன் -
ஹிதன்;நீசன்- சண்டாளன். 109
