மிதிலைக் காட்சிப் படலம் - 673

bookmark

திரிசங்கு சண்டாளனாதல்

673.

‘மலர் உளோன் மைந்தன் - மைந்த! -
   வழங்கிய சாபம்தன்னால்
அலரியோன்தானும் நாணும்
   வடிவுஇழந்து. அரசர் கோமான்.
புலரிஅம் கமலம்போலும்.
   பொலிவு ஒரீஇ. வதனம். பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த
   படிவம் வந்துற்றது அன்றே.
 
மைந்த    - இளைஞனான இராமனே! மலருளோன்  மைந்தன் -
பிரமதேவன் மகனான வசிட்டன்; வழங்கிய சாபம் தன்னால் - இட்ட
சாபத்தால்;  அரசர்  கோமான்  -  அரசர்  தலைவனான  திரிசங்கு;
அலரியோன்   தானும்  -  கதிரவனும்;  நாணும்  வடிவு  இழந்து
- வெட்கப்படுமாறு இருந்த தன்  அரச  வடிவத்தை நீங்கி; புலரி அம்
கமலம்  போலும் -  உதய  காலத்தில்  மலர்கின்ற தாமரை போன்ற;
வதனம்  பொலிவு  ஒரீஇ -  திருமுகத்தின் அழகு  கெட்டு;  பூவில்
பலரும்  -  பூவுலகில்  எல்லோரும்;  இகழ்தற்கு  ஒத்த  படிவம் -
இகழ்தற்கரிய  சண்டாள  வடிவம்;  ஆங்கு அன்றே - அவ்வரசனுக்கு
அந்த இடத்தில் அப்போதே; வந்து உற்றது - வந்து அடைந்தது.  

திரிசங்கு.     தன்மேனி முகப்பொலிவு யாவும் நீங்கிச்   சண்டாள
வடிவத்தை     அடைந்தான்.     அலரி:    ஆயிரம்    கதிர்களால்
விளங்குபவன்.                                            110