மிதிலைக் காட்சிப் படலம் - 669
கோசிகன் திலோத்தமையோடு கலவியின்
மூழ்கிப் பின்பு வெறுப்புறுதல்
669.
‘அன்னவன் மேனி காணா.
அனங்க வேள் சரங்கள் பாய.
தன் உணர்வு அழிந்து காதற்
சலதியின் அழுந்தி. வேந்தன்
பன்ன அரும் பகல் தீர்வுற்று.
பரிணிதர் தெரித்த நூலில்
நல் நயம் உணர்ந்தோன் ஆகி.
நஞ்சு எனக் கனன்று. நக்கான்.
வேந்தன் - அரசனான கௌசிகன்; அன்னவள் மேனி காணா -
திலோத்தமையின் மேனியழகைக் கண்டு; அனங்க வேள் -
மன்மதனுடைய; ரங்கள் பாய - அம்புகள் (தன்மேற்) பட்டுத்
தைத்தலால்; தன் உணர்வு அழிந்து -தனது நல்லறிவு கெட்டு; காதல்
சலதியின் அழுந்தி - அவளது காமக் கடலிலே மூழ்கி; பன்னரும்
பகல் தீர்வுற்று . சொல்ல முடியாத பல நாட்கள் அதிலே
கழியப் பெற்று; பரிணிதர் தெரிந்த நூலின் - (பின்பு) நல்லறிஞர்
ஆராய்ந்து கூறின கலைகளின்; நல் நயம் உணர்ந்தோன்
ஆகி - சிறந்த பொருள்களை உணர்ந்தவனாகி; நஞ்சு
எனக் கனன்று - (அச்சிற்றின்பத்தை) நஞ்சுபோல் வெறுத்து;
நக்கான் - நகைத்தான்.
தனது தவம் குலையக் காரணமான திலோத்தமையை எண்ணிச்
சினமும் தனது செய்கையில் வெறுப்பும் கொண்டு கௌசிகன்
சிரித்தான். சிரித்தற்குக் காரணம் - செய்யக் கூடாத ஒழுக்கத்தைச்
செய்து விட்டதால். பரிணிதர் - அறிவின் பக்குவம் முதிர்ந்தவர். 106
