மிதிலைக் காட்சிப் படலம் - 670

bookmark

திலோத்தமையை விட்டுக் கோசிகன் தவம்புரியத்
தனெ்றிசை சார்தல்

விசுவாமித்திரன் தென்திசை சென்று தவம் செய்தல்
 
670.

‘’விண் முழுதுஆளி செய்த
   வினை’’ என வெகுண்டு. ‘’நீபோய்.
மண்மகள் ஆதி’’ என்று.
   மடவரல்தன்னை ஏவி.
கண் மலர் சிவப்ப. உள்ளம்
   கறுப்புறக் கடிதின் ஏகி.
எண்மரின் வலியன் ஆய
   யமன்திசைதன்னை உற்றான்.
 
(இவ்வாறு     தன்  தவம்  அழிந்தது)  விண்  முழுது  ஆளி  -
தேவலோகம்  முழுவதும்  ஆட்சி  புரியும் இந்திரனது; செய்த வினை
என  -  வஞ்சனைச் செயலாகும் என்று அறிந்து; வெகுண்டு - சினம்
கொண்டு;  நீ  போய்  மண்மகள்  ஆதீ  - நீ  நிலவுலகம் சென்று
மானிடகப்  பெண்ணாகப் பிறப்பாயாக;  என்று  மடவரல் தன்னை -
என்று  அத்திலோத்தமையை;  ஏவி.   சபித்து விட்டு;    கண்மலர்
சிவப்ப -   (சினத்தால்)   தாமரை   போன்ற   கண்கள்  செந்நிறம்
அடையவும்;  உள்ளம்   கறுப்பு   உற  -  மனம்  கோபப்படவும்;
கடிதின் ஏகி - (அவ்விடம்  விட்டு) விரைவிலே  சென்று; எண்மரில்
வலியன் ஆய - எண்  திசைப்  பாலகர்களில்  வலிமையுள்ளவனான;
யமன்  திசை தன்னை - யமனது திசையை; உற்றான்- அடைந்தான்
(கௌசிகன்).   

தனது  தவம் குலையக் காரணமான திலோத்தமையைச் சபித்த பின்
கௌசிகன்   தவம்  செய்யத்  தென்திசை   சென்றான்.  தென்திசைப்
பாலகன்  -  இயமன். ‘கூற்றத் தன்ன மாற்றரு முன்பின் - (புறம் 362)
எண்மரில் இயமன் வலியன் என்பது பெறப்படும்.               107