மிதிலைக் காட்சிப் படலம் - 665
கோசிகன் சிவபிரானைத் துதித்துப் படை பெறுதல்
665.
‘கடவுளர் படைகள் ஈறாக்
கற்றன படைகள் யாவும்
விட விட. முனிவன் தண்டம்
விழுங்கி. மேல் விளங்கல் காணா.
வடவரை வில்லித்ன்னை
வணங்கினன் வழுத்தலோடும்.
அடல் உறு படை ஒன்று ஈயா.
அன்னவன் அகன்றான் அன்றே.
கடவுளர் படைகள்- (சிறிய அம்புகள் முதல்) தேவர்களின்
அத்திரங்கள்; ஈறா - இறுதியாக; கற்றன படைகள் யாவும் - அறிந்து
பழகிய ஆயுதங்கள் யாவற்றையும்; விட விட - கௌசிகன் எய்து
கொண்டுவர; முனிவன் தண்டம் - வசிட்டனது பிரமதண்டமானது;
விழுங்கி - அவற்றையெல்லாம் தன்னுள் கொண்டு்; மேல் விளங்கல்-
மேன்மை பெற்று விளங்குதலை; காணா - கண்டு்; (கோசிகன்);
வடவரை வில்லிதன்னை - மேருவை வில்லாகக் கொண்ட உருத்திர
மூர்த்தியை; வணங்கினன் - வணங்கி; வழுத்தலோடும் - துதித்த
அளவில்; அன்னவன் - அச் சிவபிரான்; (எதிர் தோன்றி); அடல்
உறு - வலிமை மிக்க ஒப்பற்ற; படை ஒன்று ஈயா - படை ஒன்றை
அளித்துவிட்டு்; அகன்றான் - மறைந்தான். .
படை ஒன்று: ஒப்பற்ற படைக் கலங்கள் என்றும் கொள்ளலாம். 102
