மிதிலைக் காட்சிப் படலம் - 666

bookmark

கோசிகன் உருத்திரப்படையை ஏவ வசிட்டன்
அதனை உண்டு விளங்குதல்

666.

விட்டனன் படையை வேந்தன்;
   விண்ணுளோர். ‘’உலகை எல்லாம்
சுட்டனன்’’ என்ன. அஞ்சித்
   துளங்கினர்; முனியும் தோன்றி.
கிட்டிய படையை உண்டு
   கிளர்ந்தனன். கிளரும் மேனி
முட்ட வெம் பொறிகள் சிந்த;
   பொரு படை முரணது இற்றே.
 
வேந்தன்     -  விசுவாமித்திரன்; படையை - அந்தப்  படையை;
விட்டனன்- (வசிட்டன்மேல்) ஏவினான்; விண் உளோர் - (அதனைக்
கண்ட) தேவர்களும்  (இப்படையால்);  உலகை  எல்லாம் -  எல்லா
உலகையும்; சுட்டனன்  என்ன - எரித்தவன் இவன் என்று; அஞ்சித்
துளங்கினர் - பயந்து நடுங்கினார்கள் (ஆயினும்); முனியும் - வசிட்ட
முனிவனும்; தோன்றி -எதிரில் வந்து; கிட்டிய படையை - நெருங்கிய
அந்த உருத்திரப் படையை; உண்டு - (தானே) உட்கொண்டு;  கிளரும்
மேனி   -   (அந்த   அத்திர   நெருப்பால்)   பொலிகின்ற;  முட்ட
வெம்பொறிகள்   -   தன்  உடம்பிலிருந்து  வெப்பமான  நெருப்புப்
பொறிகள்;  சிந்த  - வெளிப்பட; கிளர்ந்தனன் - (தன்னைத் தாக்கிய
அப்படையின்  வலிமை  அழியுமாறு  செய்து) ஆற்றலால் பொலிவுற்று
நின்றான்; பொருபடை முரண் அது - போர் செய்து அழிப்பதற்குரிய
உருத்திரப்  படையின்  அவ்வலிமை; இற்று - (வசிட்டனிடம்)  இப்படி
ஆயிற்று.   

சுட்டனன் - தெளிவு குறித்த கால வழுவமைதி.              103