மிதிலைக் காட்சிப் படலம் - 664
கோசிகன் அம்பெய்ய வசிட்டன் பிரம தண்டத்தை
எதிருமாறு ஏவுதல்
விசுவாமித்திரன் வசிட்டன் போர்
664.
‘ஐ - இருபதின்மர் மைந்தர்
அவிந்தமை அரசன் காணா.
நெய் பொழி கனலின் பொங்கி.
நெடுங் கொடித் தேர் கடாவி.
கை தொடர் கணையினோடும்
கார்முகம் வளைய வாங்கி.
எய்தனன்; முனியும். தன் கைத்
தண்டினை. ‘’எதிர்க’’ என்றான்.
(அப்பொழுது); அரசன் - இக் கௌசிகராசன்; ஐ இரு
பதின்மர்மைந்தர் - தன் புத்திரர் நூறு பேர்களும்; அவிந்தமை
காணா - இறந்ததைக் கண்டு்; நெய் பொழி கனலின் பொங்கி -
நெய் சொரிந்த நெருப்புப் போலச் சீறியெழுந்து; நெடுங்கொடித் தேர்
- நீண்ட கொடியமைந்த தன் தேரை; கடாவி - செலுத்தி்; கார்முகம்
வளைய வாங்கி - வில்லை நன்கு வளைத்து; கை தொடர்
கணையினோடும் - தன் கையிலிருந்து தொடர்ச்சியாக விடப்படும்
அம்புகளால்; எய்தனன் - (வசிட்டன்மேல்) எய்யத் தொடங்கினான்;
முனியும் - வசிட்ட முனிவனும்; தன் கைத் தண்டினை - தன்
கையிலுள்ள; பிரமதண்டத்தை நோக்கி; எதிர்க என்றான் - நீ
அந்த ஆயுதங்களை எதிராக ஏற்றிடு என்று நியமித்தான்.
கணையினோடு: கணையினால்: ஓடு கருவிப் பொருள். வளைய
வாங்குதல்: ஒரு பொருட் பன்மொழி. 101
