மிதிலைக் காட்சிப் படலம் - 663

bookmark

வசிட்டனை எதிர்த்த கோசிகன்புதல்வர் இறத்தல்

வசிட்டனின் சினத்தால் அரச குமாரர் இறப்பு
 
663.

‘’சுரபிதன் வலி இது அன்றால்;
   சுருதி நூல் உணர வல்ல
வர முனி வஞ்சம்’’ என்னா.
   ‘’மற்று அவன் சிரத்தை இன்னே
அரிகுதும்’’ என்னப் பொங்கி.
   அடர்த்தனர்; அடர. அன்னான்
எரி எழ விழித்தலோடும்.
   இறந்தனர் குமரர் எல்லாம்.
 
சினம்     மிக்க கோசிக குமாரர்கள்; இது - இவ்வாறு பசுவினிடம்
மிலேச்சர் தோன்றி நமது சேனையை அழித்தது; சுரபி தன் வலியன்று
-  காமதேனுவின் வலிமையல்ல;  சுருதி நூல் உணர வல்ல - வேதக்
கலைகளை  அறியவல்ல;  வரமுனி - வரம் பெற்ற வசிட்ட முனிவனது;
வஞ்சம்  என்னா -  வஞ்சகச்  செயலாகும்  என்று சொல்லி; அவன்
சிரத்தை  -  அம் முனிவனது  தலையை;  இன்னே  அரிகுதும்  -
இப்பொழுதே  அறுத்திடுவோம்;  என்ன  -  என்று  வீரமொழி கூறி்;
பொங்கி       சினந்து    எழுந்து;   அடர்த்தனர்   -  எதிர்த்து
நெருக்கினார்கள்; அடர - அவ்வாறு நெருக்க (அப்போது)்; அன்னான்
-  அவ் வசிட்ட முனிவன்;  எரி  எழ விழித்தலோடும் - தீப்பொறி
பறக்கும்படி கண்களால் விழித்துப் பார்த்த அளவிலே; குமரர் எல்லாம்
-     விசுவாமித்திரன்     குமாரர்    யாவரும்;    இறந்தனர்   -
மடிந்ததொழிந்தார்கள்.                                     100