திருத்தக்க தேவர்

திருத்தக்க தேவர்

bookmark

வாழ்க்கை வரலாறு திருத்தக்க தேவர் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணப் புலவர். திருத்தக்கதேவர் சோழர்குலத் தோன்றல் என்று கூறப்படுகின்றார். இவர் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும், ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைநிகழ்ந்த காலத்தில் ஒரு பகுதியாக விருக்கக்கூடும் என்று தெரிகிறது. இவர் அந்தக் காலத்திலே தமிழகத்திலே பெரிதும் செல்வாக்குற்றிருந்த ஆருகத சமயத்தைச் சார்ந்தவராவார். மேலும் இளமையிலேயே இவர் துறவியாகியிருந்தவர். பல கலையும் கற்றுத் தேர்ந்து அறிவுக்கடலாகத் திகழ்ந்தவர். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி என்னும் நூலை இயற்றிய ஆசிரியர். இவர் நரிவிருத்தம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். திருத்தக்க தேவர் இயற்றியுள்ள சீவக சிந்தாமணி, தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சிறப்பாக இவர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினும் ஆசிரியர் திருவள்ளுவனாரையே பின்பற்றித் தமது காப்பியத்தைப் படைத்தருளி யிருக்கின்றார். சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது. ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருவாலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.