மிதிலைக் காட்சிப் படலம் - 662
கோசிகன் சேனை அழிதலும் ,
கோசிகன் புதல்வர்கள் வெகுளுதலும்
662.
‘பப்பரர் யவனர் சீனர்
சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும்
கபிலைமாட்டு உதித்து. வேந்தன்
துப்புடைச் சேனை யாவும்
தொலைவுறத் துணித்தலோடும்.
வெப்புடைக் கொடிய மன்னன்
தனயர்கள் வெகுண்டு மிக்கார்.
(அங்ஙனம் காமதேனு மயிரைச் சிலிர்த்தவுடனே) பப்பரர்-
பப்பரர்களும்; யவனர் - யவன தேசத்தார்களும்; சீனர் - சீனர்களும்;
சோனகர் - சோனகர்களும்; முதல - முதலான; பல்லோர்- மிலேச்ச
வீரர்கள் பலர்; கைப்படை அதனினோடும் - கைகளில்
ஆயுதங்களோடும்; கபிலை மாட்டு உதித்து - அப் பசுவினிடம்
தோன்றி; வேந்தன் துப்பு உடை அக் கௌசிக மன்னனுடைய
வலிமையுள்ள; சேனை யாவும் - படைகளையெல்லாம்; தொலைவு உற
- அழியும்படி; துணித்தலோடும் - கண்ட துண்டங்களாக்கின
அளவிலே; வெப்பு உடை - (இயற்கையில்) சினம் கொண்ட; கொடிய
மன்னன் தனயர்கள் - கொடியவர்களாகிய கௌசிக மன்னனுடைய
மைந்தர்கள்; வெகுண்டு மிக்கார் - கோபித்துத் தாக்கலானார்கள்.
பப்பரம். சீனம். சோனகம் - மிலேச்ச சாதி பேதங்கள் - விளங்காத
வேற்றுமொழிகள் பேசுகின்ற புற நாட்டவர். 99
