மிதிலைக் காட்சிப் படலம் - 661
வசிட்டன் மொழி கேட்ட காமதேனு
சினந்து மயிர் சிலிர்த்தல்
661.
‘’கொடுத்திலென். யானே; மற்று இக்
குடைகெழு வேந்தன்தானே
பிடித்து அகல்வுற்றது” என்ன.
பெருஞ் சினம் கதுவும் நெஞ்சோடு.
‘’இடித்து எழு முரச வேந்தன்
சேனையை யானே இன்று
முடிக்குவென். காண்டி’’ என்னா.
மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே.
யானே கொடுத்திலென் - (உனது உடன்பாடு இல்லாமல் உன்னை)
நானே கௌசிகனுக்குக் கொடுக்கவில்லை; இக் குடை கெழு- வெற்றிக்
குடையுடைய; வேந்தன் தானே - அவ்வரசனே (உன்னை); பிடித்து
அகல்வுற்றது - பிடித்துக் கொண்டு போகத் தொடங்கிய செயல் இது;
என்ன -என்று முனிவன் விடை கூற; (அது கேட்டு); பெருஞ் சினம்
- (அப்பசு) பெருங்கோபம்; கதுவும் நெஞ்சோடு - கொண்ட
மனத்தோடு; இடித்து எழும் முரசம் - இடியை ஒத்து எழுகிற
ஓசையுடைய முரசங்களை; வேந்தன் சேனையை - கொண்ட
இவ்வரசனது படைகளை; யானே இன்று முடிக்குவென் - நானே
இன்று அழித்துவிடுவேன்; காண்டி என்னா - (அதைக்) காண்பாயாக
என்று சபதமிட்டு; அன்றே மொய்ம்மயிர்சிலிர்த்தது - அப்பொழுதே
அடர்ந்த தன் உடம்பின் மயிர்களைச் சிலிர்த்தது.
அகல்வுற்றது: தொழிற்பெயர் ‘வருவதாகில் கோவைக் கொண்டு
அகல்க’ என்றதால் ‘நான் கொடுக்கவில்லை; வேந்தனே உன்னைக்
கொண்டு அகல்வுற்றான்’ என்பது பெறப்பட்டது. 98
