மிதிலைக் காட்சிப் படலம் - 583

bookmark

இளமைந்தர்களின் காட்சி

583.

வெஞ் சினம் உருவிற்று என்னும்
   மேனியர். வேண்டிற்று ஈயும்
நெஞ்சினர். ஈசன் கண்ணில்
   நெருப்பு உறா அனங்கன் அன்னார்.
செஞ் சிலைக் கரத்தர். மாதர்
   புலவிகள் திருத்திச் சேந்த
குஞ்சியர். சூழ நின்ற
   மைந்தர்தம் குழாங்கள் கண்டார்
 
வெஞ்சினம் உருவிற்று- கொடுமையான சீற்றத்தின் வடிவமெடுத்து;
என்னும்  மேனியர்  -  (இவ்வுலகில்)  வந்தது  போன்ற  உடல்வலி
உடையவர்களும்;  வேண்டிற்று  ஈயும்  - (வேண்டுகின்றவர்) வேண்டு
பொருள்களைத்     தருகின்ற;     நெஞ்சினர்     -     அருள்
நெஞ்சமுடையவர்களும்; ஈசன் கண்ணில் - சிவனது நெற்றிக்கண்ணில்
உள்ள;   நெருப்பு உறா  -  நெருப்புக்கு  இலக்காகி   எரிந்திடாத;
அனங்கன் அன்னார்  -  (தன்   இயல்பான  வடிவத்திலே  உள்ள)
மன்மதனை (அழகில்)   ஒத்தவர்களும்;   செஞ்சிலைக்  கரத்தர் -
வில்லேந்திய செங்கை  உடையவர்களும்;  மாதர் புலவிகள் திருத்தி
-  பெண்களின்  ஊடல்களைத்    தவிர்த்து   நின்றதனால்;  சேந்த
குஞ்சியர் -  (அதனால்)   சிவந்த     முடியுடையவர்களும்  ஆகிய;
சூழநின்ற -இளங்குமரர்களின் கூட்டங்களை; கண்டார்- பார்த்தார்கள்.

சேந்த குஞ்சியர்: மகளிர் கொண்ட ஊடலைத் தணிக்கும் பொருட்டு
ஆடவர்  அவர்களின்  அடிகளிலே  தம்  முடிகள் படும்படி விழுந்து
வணங்குவர்.     அப்பொழுது     அம்    மகளிரின்    காலிலுள்ள
செம்பஞ்சுக்குழம்பு ஆண்களின்   முடியில்  படுவதால் முடி செந்நிறம்
அடைந்தது. குஞ்சி -  ஆண்  மயிர்.  ‘கொடுமை  ஒழுக்கம்  கோடல்
வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவன்’ - (தொல். பொருள்.கற்பி.6)    20