மிதிலைக் காட்சிப் படலம் - 584
பூஞ்சோலைகளின் காட்சி
584.
பாகு ஒக்கும் சொல் பைங்கிளி
யோடும் பல பேசி.
மாகத்து உம்பர் மங்கையர்
நாண மலர் கொய்யும்
தோகைக் கொம்பின் அன்னவர்க்கு
அன்னம் நடை தோற்றுப்
போகக் கண்டு. வண்டுஇனம்
ஆர்க்கும் பொழில் கண்டார்.
பாகு ஒக்கும்- சர்க்கரைப் பாகு போன்ற; பலசொல் பல இனிய
சொற்களை; பைங்கிளியோடும் பேசி - பச்சைக்கிளியோடும் பேசி;
மாகத்து உம்பர் - வானத்தின் மேல் வாழும்; மங்கையர் நாண -
தெய்வப் பெண்களும் (தமது வடிவழகிற்குத் தோற்று) வெட்கம்
அடையும்படி; மலர் கொய்யும் - பூக்களைப் பறிக்கின்ற; தோகை -
(சாயலால்) மயிலையும்; கொம்பின் அன்னவர்க்கு - (மென்மையான
உருவத்தால்) பூங்கொம்பையும் ஒத்துள்ள மாதர்களுக்கு; அன்னம்
நடை - அன்னம் நடையழகிலே; தோற்றுப் போக - (ஒப்புமை
ஆகாமையால்) தோல்வியுற்றுப் பின் செல்ல; கண்டு - அதனைப்
பார்த்து; வண்டுஇனம் ஆர்க்கும் - வண்டுகளின் கூட்டம்
ஆரவாரம் செய்தற்கு இடமான; பொழில் கண்டார் - சோலைகளைப்
பார்த்தார்கள்.
ஒரு செயலில் உயர்ந்தவர் வெல்வதையும் தாழ்ந்தவர்
தோற்பதையும் கண்ட பார்வையாளர் வென்றவர்க்கு மகிழ்ச்சியும்
தாற்றவர்க்கு அவமானமும் உண்டாகுமாறு ஆரவாரம் செய்வது
இயல்பு. அவ்வாறே இயல்பாகப் பேரொலி செய்கிற வண்டுகளை
அன்னப் பறவை மகளிர் நடைக்குத் தோற்றுப் போனதற்காக
ஆரவாரிப்பதாகக் காட்டுகிறார். தோகைக் கொம்பு: கூந்தலையுடைய
மாதர்க்கு உவமை. 21
