மிதிலைக் காட்சிப் படலம் - 582

bookmark

மைந்தர் வட்டாடும் இடங்கள்

582.

இயங்கு உறு புலன்கள் அங்கும்
   இங்கும் கொண்டு ஏக ஏகி.
மயங்குபு திரிந்து நின்று
   மறுகுறும் உணர்வு இது என்ன.
புயங்களில் கலவைச் சாந்தும்.
   புணர் முலைச் சுவடும். நீங்கா.
பயங் கெழு குமரர் வட்டு - ஆட்டு
   ஆடு இடம் பலவும் கண்டார்.
 
இயங்கு உறு புலன்கள் - (பல இடத்தும்) செல்வதற்குரிய ஒட்டிய
ஐம்புலன்களும்;   அங்கும்  இங்கும் கொண்டு ஏக - தத்தமக்குரிய
பல   வழிகளிலே   இழுத்துக்  கொண்டு  செல்ல; ஏகி - (அவற்றின்
வழியிலே) சென்று ;  மயங்குபு -  மயக்கமுற்று;  திரிந்து  நின்று -
அலைந்து    கொண்டே; மறுகுறும் - கலங்குகின்ற; உணர்வு  இது
என்ன - சிற்றறிவு  இது  என்று சொல்லும்படி; கலவைச் சாந்தும் -
(குங்குமப்பூ  முதலிய  நறுமணப்  பொருள்களோடு  கூடிய)  சந்தனக்
கலவையும்; புணர்முலைச்  சுவடும்  - (ஒன்றோடு ஒன்று) நெருங்கிய
மகளிர்  முலைகள் (இறுகத்  தழுவுங் காலத்துப்) பொருந்திய தழும்பும்;
புயங்களில் நீங்கா - (தம்முடைய) தோள்களில் நீங்காத; பயம்கெழு
குமரர் -  (கல்வி.  செல்வம்  முதலான)  பயன்கள்  மிகுந்த இளைய
வீரர்கள்; வட்டு ஆட்டு ஆடு  இடம்  -  உருட்டுகின்ற  இடங்கள்
தோறும்  செல்லும்  வட்டுக்காய் வைத்து விளையாடும் வட்டாட்டிடம்;
பலவும் கண்டார் - பலவற்றையும் பார்த்தார்கள்.

புலனறிவும்     வட்டும்:   ஐம்பொறிகளுக்கும் உரிய ஐம்புலன்கள்.
பலவற்றின்    வழியே    சென்று   சுழலுகின்ற   அறிவு.   வீரர்கள்
விளையாடும்போழுது  எங்கும் சுற்றும்வட்டுக்கு உவமையாகும். வட்டு:
உருட்டுக் காய். ‘அரங்கின்றி வட்டாடி யற்றே’ - (குறள் 431).      19