மிதிலைக் காட்சிப் படலம் - 581

bookmark

நீர்நிலைகளில் மகளிராடுங் காட்சி

581.

 பங்கயம். குவளை. ஆம்பல்.
   படர் கொடி வள்ளை. நீலம்.
செங் கிடை. தரங்கம். கெண்டை.
   சினை வரால். இனைய தேம்ப.
தங்கள் வேறு உவமை இல்லா
   அவயவம் தழுவி. சாலும்
மங்கையர் விரும்பி ஆடும்
   வாவிகள் பலவும் கண்டார்.
   
பங்கயம்  குவளை- தாமரை மலர்களும் கரு நெய்தல் பூக்களும்;
ஆம்பல் - செவ்வாம்பல்  மலர்களும்;  படர்  கொடி  வள்ளை  -
பரவியுள்ள வள்ளைக்கொடியின்  இலைகளும்;  நீலம்  செங்கிடை -
நீலோற்பல  மலர்களும்  சிவந்த கிடையாகிய சடைகளும்; தரங்கம் -
நீர்  அலைகளும்; கெண்டை - கெண்டை மீன்களும்; சினைவரால் -
சூல்கொண்ட வரால்  மீன்களும்; இனைய - இன்னும் இவை போன்ற
நீர் வாழும் உயிர்கள் பலவும்; தேம்ப - (பெண்களின் உறுப்புகளுக்கு
ஒப்பு  ஆகாமையால்) வருந்தும்படி;  தங்கள்  வேறு - தங்களுக்குத்
(தாங்களே யல்லாமல்)  வேறு; உவமை இல்லா - உவமைப் பொருள்
இல்லாத;  அவயவம்   தழுவி  -   (தங்களது   முகம்   முதலாய)
உறுப்புகளோடு  பொருந்தி; சாலும் மங்கையர்  -  சிறந்த  மகளிர்;
விரும்பி  ஆடும் - விருப்பத்தோடு நீராடுகின்ற; வாவிகள் பலவும்
-தடாகங்கள் பலவற்றையும்; கண்டார் - பார்த்தார்கள்.

தாமரை - முகத்திற்கும்;  குவளையும் கெண்டையும்- கண்ணுக்கும்.
ஆம்பல் -    வாய்க்கும். வள்ளை - காதுக்கும். நீலம் - கூந்தலுக்கும்.
கிடை - அதரத்திற்கும். அலை - வயிற்று மடிப்புக்கும். வரால் மீன் -
கணைக்காலுக்கும்   ஒப்பாக  அமையாமல்  வருந்துகின்றன  என்பது
உணரப்படுகிறது.   

மகளிர் குடைந்து நீராடுவதால் உடல்கள் வருந்துகின்றன.      18