மிதிலைக் காட்சிப் படலம் - 576
குதிரைகள் சுழன்றோடுதல்
576.
கொட்பு உறு கலினப் பாய் மா.
குலால் மகன் முடுக்கி விட்ட
மட் கலத் திகிரி போல.
வாளியின் வருவ. மேலோர்
நட்பினின் இடையறாவாய்.
ஞானிகள் உணர்வின் ஒன்றாய்.
கட்புலத்து இனைய என்று
தெரிவு இல. திரியக் கண்டார்.
குலால் மகன் - குயவனால்; முடுக்கிவிட்ட - வேகமாகச்
சுழற்றிவிடப்பட்ட; மண்கலத் திகிரிபோல - மண்கலம் செய்யும்
கருவியான சக்கரம் போல; வாளியின் வருவ - வட்டகதியாய் ஓடி
வரக் கூடியனவும்; மேலோர் நட்பினின் - பெரியவர்கள் (தமக்குள்
பூணும்) நட்பும் (இடையில் நீங்காமல் தொடர்வது) போல; இடை
அறாவாய் - இடையில் விட்டு நீங்காதனவும்; ஞானிகள் உணர்வின்
- தத்துவ ஞானிகளின் அறிவு (பல பொருள்களிடத்தும் செல்லாது ஒரு
பொருளிலே செல்வது) போல ஒரு தன்மையுடையனவுமாகி; கண்
புலத்து - கண்ணின் பார்வைக்கு; இனைய என்று - இத்தன்மையன
என்று; தெரிவு இல - அறிய முடியாதனவான; கொட்பு உறு -
சுழன்று ஓடுகின்ற; கலினப் பாய்மா - கடிவாளம் பூண்டு பாய்ந்து
செல்லும் இயல்புள்ள குதிரைகள்; திரியக் கண்டார் - எங்கும்
திரிவதைப் பார்த்தார்கள்.
குதிரைகள் இயல்பு: இடையில் நிற்காமலும். வழியைவிட்டு
விலகாமலும் குதிரைகள் ஓடும் இயல்புடையன. ‘’கூட்டுகிற
முடுக்கிவிட்ட குயமகன் திகிரிபோல வாள்திறல் தேவதத்தன் கலினமா
திரியுமன்றே’’ - சிந்தா:786. ஞனிகள்-குதிரைகள். ஞானிகளின் அறிவு
ஒன்றாயிருந்தும் சிறிது நேரத்திலே பல பொருளிடத்தும்
செல்லுதல்போலக் குதிரை ஒன்றாயிருந்தும் சிறிது. நேரத்திலே. பல
இடத்தும் செல்லும் தன்மையது. மேலோர் நட்பு இடையறாமை: ‘நிறை
நீர நீரவர் கேண்மை பிறைமதி’ -குறள்782. ‘’பெரியவர் கேண்மை
பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்’’ -நாலடியார்:125 12
