மிதிலைக் காட்சிப் படலம் - 577
மாடங்களில் மாதர்கள் காட்சி
577.
வாளரம் பொருத வேலும்.
மன்மதன் சிலையும். வண்டின்
கேளொடு கிடந்த நீலச்
சுருளும். செங் கிடையும். கொண்டு.
நீள் இருங் களங்கம் நீக்கி.
நிரை மணி மாட நெற்றிச்
சாளரம்தோறும் தோன்றும்
சந்திர உதயம் கண்டார்.
வாளரம் - அரம் என்னும் வாள் வகையால்; பொருத வேலும் -
அராவிய வேலும்; மன்மதன் சிலையும் - காமதேவனது வில்லும்;
வண்டின் கேளொடு - வண்டுகளின் இனத்தோடு; கிடந்த நீலச்
சுருளும் - பொருந்திய நீல மணிச்சுருளும்; செங்கிடையும் -
சிவந்த நெட்டி என்னும் சடையையும்; கொண்டு - (தன்னிடத்தே)
கொண்டு; நீள் இருங் களங்கம் - நீண்ட காலம் தம்மிடம்
தங்கியிருந்த பெரிய களங்கத்தை; நீக்கி - போக்கி; நிரைமணி
மாடம் - இரத்தினங்கள் பதித்த வரிசையாக உள்ள மாட
மாளிகைகளின்; நெற்றிச் சாளரம் தோறும் - மேலிடத்தில்
உள்ள பலகணி வாயில்கள் தோறும்; தோன்றும் - காணப்படுகின்ற;
சந்திர உதயம் - முழுச் சந்திரர்களின் உதயத்தை; கண்டார் -
பார்த்தார்கள்.
சாளரப் பெண்கள்: வீதியில் நடக்கும் நிகழ்ச்சிகளைக்
காண்பதற்காக உப்பரிகையின்மேல் சாளரங்கள்தோறும் பெண்கள்
நிற்கின்றார்கள்; அவர்களின் முகத்தோற்றத்தைக் கண்ட காட்சியே
இங்குச் சித்தரிக்கப் பெற்றுள்ளது. அணி: உருவக உயர்வு நவிற்சியணி:
மதியும் பெண்களின் முகமதியும்: வான்மதி; வானத்தில் காணக்கூடிய
மதி ஒன்று; பகலில் ஒளி மழுங்கக்கூடியது; களங்கம் உள்ளது.
பெண்மதிகள்: பகலில் ஒளி மழுங்காது; களங்க மற்ற நிலை; பல
சந்திரர்கள் (முகங்கள்) உதயமாதல். உவமை: வேல் - கண்களுக்கு;
சிலை - புருவத்துக்கு; வண்டோடு கிடந்த நீலச்சுருள் - கூந்தலுக்கு;
செங்கிடை (அதரம்) - உதட்டுக்கு; சந்திரன் - பெண்களின்
முகங்களுக்கு. 14
