மிதிலைக் காட்சிப் படலம் - 574

bookmark

கடைவீதிகளின் சிறப்பு

574.

வரப்பு அறு மணியும். பொன்னும்.
   ஆரமும். கவரி வாலும்.
சுரத்திடை அகிலும். மஞ்ஞைத்
   தோகையும். தும்பிக் கொம்பும்.
குரப்பு அணை நிரப்பும் மள்ளர்
   குவிப்புற. கரைகள்தோறும்
பரப்பிய பொன்னி அன்ன
   ஆவணம் பலவும் கண்டார்.*
 
வரம்பு     அறு அணியும்- அளவில்லாத இரத்தினங்களையும்;
பொன்னும்  ஆரமும் -  பொன்னையும்  முத்துக்களையும்;   கவரி
வாலும் -   கவரிமானின்   வாலையும்;   சுரத்திடை  அகிலும்  -
காடுகளில்   கிடைக்கின்ற    அகில்    கட்டைகளையும்; மஞ்ஞைத்
தோகையும் - மயிற் பீலிகளையும்;  தும்பிக்  கொம்பும் - யானைத்
தந்தங்களையும்   கொண்டு;   குரம்பு    அணை  - வயல்களுக்கு
வரப்புகளாகிய கரைகளை; நிரப்பும்  மள்ளர்  -  உழவர்கள்  கட்டி
முடிக்குமாறு;  குவிப்புற  -  (குட்டுக் குட்டாகக்)  குவித்து வைக்கும்;
கரைகள் தோறும் பரப்பிய - கரைகள் எங்கும்  பரவச்  செய்கின்ற;
பொன்னி  அன்ன  - காவிரி நதியைப் போன்ற; ஆவணம் பலவும்
- கடைவீதிகள் பலவற்றையும்; கண்டார் - பார்த்தார்கள்.  

கடைவீதி     - காவிரி - கடைவீதியின் இரு பக்கங்களிலும் மணி
முதலிய  பண்டங்கள்  பரவிக்  கிடப்பது காவிரியின் இருகரைகளிலும்
மலைபடு  திரவியங்கள்  குவிந்து  கிடப்பனபோல்  உள்ளன.  -‘யாறு
கிடந்தன்ன அகல் நெடுந் தெருவின்’ - மதுரைக்: 359. வரப்பு.. குரப்பு
என்பன வலித்தல் விகாரம்                                 10