மிதிலைக் காட்சிப் படலம் - 573
மாதர்கள் ஊசலாடுதல்
573.
பூசலின் எழுந்த வண்டு
மருங்கினுக்கு இரங்கிப் பொங்க.
மாசு உறு பிறவி போல
வருவது போவது ஆகி.
காசு அறு பவளச் செங் காய்
மரகதக் கமுகு பூண்ட
ஊசலில். மகளிர். மைந்தர்
சிந்தையோடு உலவக் கண்டார்.*
மாசு உறு பிறவிபோல் - குற்ற நிறைந்த பிறவி போல; வருவது
போவது ஆகி - (மாறி மாறி) வருவதும் போவதுமாகிய; காசு அறு -
குற்றம் அற்ற; பவளச் செங்காய் - பவளம் போலச் சிவந்த
காய்களையுடைய; மரகதக் கமுகு - மரகதம் போலப் பச்சை நிறப்
பாக்கு மரங்களிலே; பூண்ட - பிணைக்கப்பட்டுள்ள; ஊசலின் மகளிர்
- ஊஞ்சல்களிலே பெண்கள் ஆட; பூசலின் எழுந்த வண்டு -
ஆரவாரத்தோடு மேலே எழுந்த வண்டுகள்; மருங்கினுக்கு -
அவர்களின் இடையின் மென்மைக்காக; இரங்கிப் பொங்க -
இரக்கப்பட்டு ஒலிக்க; மைந்தர் சிந்தையோடு - ஆண்களின்
மனத்தோடு; உலவக் கண்டார் - ஆடுவதைப் பார்த்தார்கள்.
தற்குறிபேற்றவணி: மகளிர் ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடும்
பொழுது. அந்த அதிர்ச்சியால் அவர்களின் உடம்பிலுள்ள
பூமாலைகளில் மொய்த்திருந்த வண்டுகள் மேலே எழுந்து பேரொலி
செய்கின்றன. அவ் வண்டுகள் இப்பெண்களின் மெல்லிய இடை
இவ்வேகத்தைப் பொறுக்காது என்று இரக்கமுற்று வாய்விட்டு அழுவது
போலவும் எனக் காட்டினார். - பிறப்புக்கு ஊஞ்சலாட்டம்
ஒப்புமையாகிறது. -கமுக மரங்களில் கயிறுகளைப் பிணைத்து
ஊஞ்சலாடுவது இன்றும் வழக்கமாக உள்ளது. 9
