மிதிலைக் காட்சிப் படலம் - 572

bookmark

மகளிர் ஆடல்

வீதிகளில் கண்ட காட்சிகள்
 
572.

நெய் திரள் நரம்பின் தந்த
   மழலையின் இயன்ற பாடல்.
தைவரு மகர வீணை
   தண்ணுமை தழுவித் தூங்க.
கை வழி நயனம் செல்ல
   கண் வழி மனமும் செல்ல.
ஐய நுண் இடையார் ஆடும்
   ஆடக அரங்கு கண்டார்.
 
நெய்திரள் நரம்பின் - தேன் ஒழுக்குப் போலத் திரண்ட யாழின்
நரம்பால்   எழும்   இசை   போல;  தந்த  மழலையின்  இயன்ற
-   (கேட்பதற்கு    இனிமையாகப்)   பாடப்பட்ட    மழலைச்சொற்க 
ளால்   அமைந்த; பாடல் - வாய்ப்பாட்டு இசையும்; தைவரும் மகர
வீணை  -  (கைவிரலால்)  தடவி  வாசிக்கப்படுகிற  மகர வீணையின்
இசையும்;  தண்ணுமை  - மத்தளத்தின் ஓசையும்; தழுவித் தூங்க -
மாறுபடாமல்   ஒன்றோடு     ஒன்று  ஒத்து  ஒலிக்கவும்;  கைவழி
நயனம்    செல்ல  -  (பலவகையாகக்   குறிப்புக்     காட்டுகின்ற
தம்முடைய) கைகள் செல்லும்  வழியே   தம்  கண்களின்   குறிப்புப்
பார்வை  செல்லவும்; கண் வழி மனமும்  செல்ல - அக்கண்களின்
பார்வை  செல்லும்  வழியிலே  மனத்தின்   குறிப்புச்    செல்லவும்;
ஐயம் நுண்  இடையார் -  உள்ளதா  இல்லையா  என்று கண்டவர்
சந்தேகப்படும்படியான சின்ன இடையை உடைய  மகளிர்;  ஆடும் -
நாட்டியம்   ஆடுகின்ற;  ஆடக  அரங்கு -  பொன்மயமான நடன
சாலைகளை; கண்டார் - பார்த்தார்கள்.  

நடனத்தில்   செய்யும் முறை நான்கு: கண்கள். கை. மனம். உடல்
என  நான்கன் தொழில்களாலும் நடனமுறை நிகழும். கைவழி நயனம்
செல்ல:   கையில்  தொழில்.  கண்வழி  மனமும்  செல்ல:  கருத்தில்
தொழில்.  மழலையின்  இயன்ற  பாடல்:  மிடற்றின் தொழில். ஆடும்:
உடலின்  தொழில்  யாழின்  நரம்புக்கு உவமை: தேன் ஒழுக்கு. நெய்:
இங்கே  ‘தேன்’  என்னும்  பொருள்  தருகிறது. யாழ்வகை நான்கு: 1.
பேரியாழ்;  2.  மகர  யாழ்;  3.  சகோட யாழ்; 4. செங்கோட்டி யாழ்;
மகரயாழ்:  19  நரம்புகளைக்  கொண்டது. நரம்பு. வீணை. தண்ணுமை
(ஒலிகள்) - கருவியாகு பெயர்கள்.                             8