மிதிலைக் காட்சிப் படலம் - 568

bookmark

மூவரும் மிதிலை மா நகரின் உட்செல்லுதல்

மூவரும் நகரினுள் புகுதல்
 
568.   

ஆதரித்து. அமுதில் கோல் தோய்த்து.
   ‘அவயமம் அமைக்கும் தன்மை
யாது?’ எனத் திகைக்கும் அல்லால்.
   மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே.
   திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும்.
   பொன் மதில். மிதிலை புக்கார்.
 
ஆதரித்து-  (மன்மதன்  சீதையின்  மேனியைப்  போன்ற  ஓர்
அழகிய வடிவத்தை) எழுத விரும்பி; அமுதில் கோல் தோய்த்து -
அமுதத்தில்     எழுதுகோலைத்  தோய்த்துக்  கொண்டு; அவயவம்
அமைக்கும் - அவள்  உறுப்புகளைச்  சித்திர்க்கும்;  தன்மை யாது
என  - விதம் (அறியாமல்  அவ்வகை) எதுவோ  என்று; திகைக்கும்
அல்லால் - திகைத்து  நிற்பானேயல்லாமல்;  மதனற்கும்  -  அந்த
மன்மதனுக்கும்;  எழுத   ஒண்ணா -  எழுத  முடியாத; சீதையைத்
தருதலாலே - பேரழகு  மிக்க   சீதையைப்   பெற்றதால்; திருமகள்
இருந்த - இலக்குமி  வாழும்;  செய்ய  போது என - செந்தாமரை
மலர் போல; பொலிந்து தோன்றும்  -  விளக்கமுற்றுத்  தோன்றும்;
பொன் மதில் மிதிலை - பொன்மதில் சூழ்ந்த மிதிலை நகரினுள்ளே;
புக்கார் - (மூவரும்) சென்றார்கள். 

சீதையின்  அழகு: மன்மதன் உலகத்தவர் அனைவரது அழகையும்
வரையறுத்து   உணர்ந்தவன்;   ஆண்   பெண்களாகிய   மக்களின்
மனத்திலே  தோன்றியுள்ளவன்: தனக்கு வடிவம் இல்லாமல் இருந்தும்
ஐந்து அம்புகளைக் கொண்டு மூவுலகையும் தன்வயப்படுத்தும் திறமை
பெற்றுள்ளான்.    இத்தகைய    இயல்புடைய    அம்    மன்மதன்
எல்லையில்லாத  பேரழகு  உடைய  சீதையின்  உருவத்தைத் தானே
சித்திரத்தில்  அமைக்கக்  கருதினான்;  அதற்கு  வண்ணப்  பொருள்
அமுதமேயெனத்  தீர்மானித்து.  அந்த அமுதத்திலே எழுதுகோலைத்
தோய்த்து   எடுத்து   எழுதத் தொடங்கினாலும்  அவளது  அழகை
முழுயைாக  எழுத முடியாமல் திகைப்பானேயல்லாமல் அச் சீதையின்
உறுப்புகளுள் ஒன்றைக் கூடச் சரியாக எழுத முடியாதாம்.         4