மிதிலைக் காட்சிப் படலம் - 569

bookmark

மூவரும் மிதிலை நகர் வீதியிற் செல்லுதல் (569-571)

தெருக்களின் சிறப்பு
 
569.

சொற்கலை முனிவன் உண்ட
   சுடர் மணிக் கடலும். துன்னி
அல் கலந்து இலங்கு பல் மீன்
   அரும்பிய வானும் போல.
வில் கலை நுதலினாரும்.
   மைந் தரும். வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட
   நெடுந் தெருஅதனில் போனார்.
 
சொற்கலை    முனிவன் - தமிழிலே  இலக்கண நூலைச் செய்த
அகத்திய முனிவனால்; உண்ட - பருகப்பட்டு; சுடர்மணிக்  கடலும்
- (நீர்  வற்றிய)  ஒளி  பொருந்திய இ ரத்தினங்கள் கிடக்கும் கடலும்;
அல் கலந்து  -  இரவுக்  காலத்தில் பொருந்தி; துன்னி இலங்கு -
நெருங்கி விளங்கும்;  பல்மீன்  அரும்பிய  -  நட்சத்திரங்கள்  பல
தோன்றிய;  வானும்  போல  -  ஆகாயமும்  போல;  வில்கலை
நுதலினாரும் - ஒளியுள்ள பிறை போன்ற  நெற்றியுடைய  மகளிரும்;
மைந்தரும் - ஆடவரும்;  வெறுத்து   நீத்த   -   வெறுப்புற்றுக்
கழற்றியெறிந்த; பொன்கலன்   கிடந்த   -    பொன்   அணிகள்
தெருவெங்கும் விழுந்துகிடக்கின்ற;  மாட  நெடுந்தெருவதனில்  -
மாடங்களையுடைய  நீண்ட  வீதியிலே;  போனார் - (அம் மூவரும்)
சென்றார்கள்.

சுடர்மணிக்     கடலும்  பொற்கலனும்;    மைந்தரும்  மகளிரும்
ஊடற்காலத்தே   வெறுத்து   எறிந்த  அணிகலன்கள்  தெருவெங்கும்
பரவிக்  கிடக்கின்றன;  அந்த  வீதி. அகத்திய முனிவன்  குடித்ததால்
தண்ணீர்   இல்லாமல்   இரத்தினங்கள்   விளங்கும்  கடல்போலவும்.
நட்சத்திரங்கள்   விளங்கும்  வானத்தைப்  போலவும்  தோன்றுகிறது.
அணி:   வீறுகோளணி  -  இங்குச்  செல்வத்தின்  மிகுதி  சொல்லப்
பெற்றமை   அறியத்தக்கது.   சொற்கலை   முனிவன்:   அகத்தியன்;
தமிழ்மொழி  இலக்கணத்தைச் சிவனிடம் நன்கு கற்றுப்  பேரகத்தியம்.
சிற்றகத்தியம்   என்னும்  இலக்கண  நூல்களை  இயற்றித்  தமிழைச்
செழிக்கச்  செய்தார்.  ஆதலின்  அவர் இவ்வாறு போற்றப் பெற்றார்.
இலக்கண   நூலை   வடமொழியாளர்   ‘சப்த   சாஸ்திரம்’  என்பர்
(சப்தம்-சொல்: சாஸ்திரம்-கலை).