மிதிலைக் காட்சிப் படலம் - 567

bookmark

துகில் கொடித் தோற்றம்

567.

பகல் கதிர் மறைய. வானம்
   பாற்கடல் கடுப்ப. நீண்ட
துகில் கொடி. மிதிலை மாடத்து
   உம்பரில் துவன்றி நின்ற.
முகில் - குலம் தடவும்தோறும்
   நனைவன. முகிலின் சூழ்ந்த
அகில்புகை கதுவும்தோறும்
   புலர்வன. ஆடக் கண்டார்.
 
பகல் கதிர் மறைய- பகற்பொழுதிற்குக் காரணமான கதிரவனின்
ஒளிக்கதிர்கள் மறையவும்; வானம் பாற்கடல்   கடுப்ப  -  வானம்
திருப்பாற்கடலைப் போன்று  காட்சியளிக்கவும்;  மிதிலை  மாடத்து
உம்பரில் - மிதிலை  நகரின்  உப்பரிகை வீடுகளின் மேல்; துவன்றி
நின்ற  -  நெருங்கிய;  நீண்ட  துகில்  கொடி - நீளமான கொடிச்
்சீலைகள்; முகில்  குலம் -  மேகக்  கூட்டம்;  தடவும்  தோறும் -
(தம்மை வந்து)  வருடும்   பொழுதும்;  நனைவன - அதன் நீரினால்
நனைவனவாகவும்; முகிலின்   சூழ்ந்த   -   (அம்)  மேகம்போலச்
சூழ்ந்து கொண்ட; அகில்புகை கதுவும் தோறும் - அகிற் கட்டையின்
புகை (தம்மில்  வந்து)   படியும்  பொழுதும்;   புலர்வன  -  உலர்
வனவாகவும்; ஆடக் கண்டார் - ஆடுதலைப் பார்த்தார்கள். 

கொடிகளின்     நெருக்கம். மிகுதி. மேகக் கூட்டத்தை  அளாவும்
உயர்ச்சி.   அகிற்புகையின்   மிகுதி   ஆகியன  இதில்  உணர்த்தப்
பெறுகின்றன.  அணி:  தொல்லுப்பெறலணி-துகிற்கொடி  மேகங்களால்
நனைவதும். அகிற் புகையால் உலர்ந்து பழைய நிலையை அடைவதும்
இவ்வணியாகும்.  பாற்கடலும்  துகிலும்:  ‘பாற்கடல்  போன்ற  துகில்’
என்றதால் துகில் வெண்ணிறமுடையது என்பது தெரிகிறது.        3