மாரிஷையின் முன்ஜென்ம சரித்திரம்

bookmark

மாரிஷையின் முன்ஜென்ம சரித்திரம் முனிவருடைய கோபமும், அவரிடத்தில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டு இருந்த தேவலோக மங்கையான பிரமிலோசை மிகவும் பயந்து அச்சத்தினால் அவளுடைய உடலானது நடுநடுங்க துவங்கியது. அதுமட்டுமின்றி மெய்சிலிர்த்து அந்த தேவலோக பெண்ணின் உடலிலிருந்து வியர்க்கவும் துவங்கியது. பயத்திலும் சிலிர்த்து கொடி போல நின்று கொண்டிருந்த அந்த தேவலோக மங்கையை பார்த்து மாமுனிவர் மிகுந்த கோபத்துடன் இங்கிருந்து உடனே போ... என் கண் முன்னே நிற்காதே... என்று உரக்கக் கூவினார். இனியும் இவ்விடத்தில் நாம் நின்று கொண்டு இருந்தால் முனிவருடைய சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்து கொண்ட பிரமிலோசை பயந்து மிகுந்த அச்சத்துடன் அந்த ஆசிரமத்தை விட்டு புறப்பட்டு வானத்தில் வழியே தேவலோகத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தாள். அவள் சென்று கொண்டிருந்த பொழுது தனது சரீரத்தில் உண்டான வியர்வை துளிகளை மரங்களின் நுனியில் இருந்த துளிர்களினால் துடைத்து விருட்சங்களின் மீது போட்டு மரத்தின்மேல் மரமாக தாண்டி சென்று கொண்டிருந்தாள். தேவலோக மங்கையான பிரமிலோசை கண்டு மாமுனிவருடன் இணைந்ததினால் உருவான கர்ப்பமானது அவளுடைய ரோம குடும்பங்களிலிருந்து வியர்வையாக கசிந்து வர துவங்கின. அந்த கசப்பான வியர்வையை அவள் துடைத்து விருட்சங்கள் மீது எறிந்தாள். அவள் எறிந்த அந்த கர்ப்பத்தை விருட்சங்கள் பெற்றுக் கொள்ளத் துவங்கின. பிறகு அந்த வியர்வை எல்லாம் வாயுவினால் கூட்டப்பெற்று ஒன்றாக திரண்டன. அவற்றை சந்திரன் ஆகிய நான் என்னுடைய கிரணங்களினால் வளர்த்து வந்தேன். இவ்விதமாக நான் வளர்த்து வந்த அந்த கர்ப்பமானது நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. ஒருநாள் அந்த கர்ப்பத்திலிருந்து அழகிய லாவண்ய ரூபம் கொண்ட கன்னி ஒருத்தி தோன்றினாள். அவள் தான் இப்பொழுது மாரிஷை என்ற பெயருடன் வளர்ந்து கொண்டிருக்கிறாள். இந்த மரங்களின் உதவி எனக்கு கிடைக்கவில்லை என்றால் இந்த கன்னியானவள் தோன்றியிருக்க முடியாது. ஆகையினால் இந்த மரங்களே இந்த கன்னியை உங்களுக்கு தருவதால் உங்களுடைய கோபத்தினை விட்டுவிடுங்கள். இந்த மாரிஷையானவள் கண்டு மாமுனிவர், பிரமிலோசையுடன் கூடியிருந்து இணைந்து விட்ட வீரியத்தினால் தோன்றியவள். மரங்களின் தளிர்கள் வழியிலாக தரித்து நானும், வாயுவும் இணைந்து பாதுகாத்து வளர்த்ததினால் கண்டு மாமுனிவருக்கும், மரங்களுக்கும், எனக்கும், வாயுவுக்கும், பிரமிலோசைக்கும் மகளாக இருக்கின்றாள்.ஆசிரமத்திலிருந்து பிரமிலோசை எனும் தேவமங்கை சென்ற பின்பு தம்முடைய தவம் எந்தவித பயனும் இல்லாமல் வீணாகி விட்டதே! என்று மிகவும் மனம் வருந்தி லோக நாயகனாக இருக்கக்கூடிய ஸ்ரீ விஷ்ணு தேவரின் நிவாஸ ஸ்தானமான ஸ்ரீ புருஷோத்தமம் என்று வழங்கப்படும் ஒரு மலைக்கு வந்து அந்த மலையின் அருகிலேயே ஏகாக்கிர சித்தத்துடன் ஸ்ரீஹரியை ஆராதித்த வண்ணமாக மகாநிஷ்டையில் இருந்து வந்தார். இவ்வாறு சந்திரன் மரங்களின் மகளாக இருக்கக்கூடிய மாரிஷையின் தோற்றத்தைப் பற்றி எடுத்துரைத்தார். மாரிஷையின் தோற்றம் இதுமட்டுமின்றி முந்தைய ஜென்மத்தில் அவளுடைய சரித்திரத்தை பற்றியும் கூறுகின்றேன். அதையும் கேட்பீர்களாக. இவ்விடத்தில் இக்கதையை நான் சொல்வதன் மூலமாக எனக்கு ஒரு காரிய சித்தியும், இதனை கேட்பதினால் உங்களுக்கு மேன்மையான பல சித்திகளும் உண்டாகும் என்று கூறினார். தருவின் கர்பத்தில் ஜெனித்திருந்த இந்த மாரிஷை பூர்வ ஜென்மத்தில் ஒரு அரசனுக்கு பத்தினியாக இருந்து வந்தாள். அவர்களுடைய திருமண வாழ்க்கை என்பது நல்முறையில் இருந்து வந்தது. இருப்பினும் அவர்களுக்கு புத்திரப்பேறு என்பது கிடைக்காமல் மாரிஷையானவள் இளம் வயதிலேயே கணவனை இழந்தாள். சிறு வயதிலேயே கணவனை இழந்த மாரிஷை மிகுந்த பக்தியுடன் ஸ்ரீமந் நாராயணனை வணங்கி வந்தாள். காலம், பொழுதுகளை தவறாமல் மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் எம்பெருமான் நாராயணனை ஆராதித்து வந்துகொண்டிருந்தாள். மாரிஷை ஸ்ரீமந் நாராயணன் மீது கொண்டிருக்கக்கூடிய பக்தியும் அவரிடத்தில் இருக்கக்கூடிய அன்பையும் கண்ட மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து திருவுள்ளம் உவர்ந்து அந்தப் பெண்ணிற்கு காட்சியளித்தார். ஸ்ரீமந் நாராயணன் தன் முன்னால் தோன்றி இருப்பதை கண்டதும் அந்த பெண் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத அளவில் இருந்தது. பலவிதங்களில் தோத்திரம் செய்தும், கீர்த்திகள் பாடியும் ஸ்ரீமந் நாராயணனை பய பக்தியுடன் வணங்கினாள். மனம் மகிழ்ந்து இருந்த ஜெகன் நாயகனான ஸ்ரீமந் நாராயணன் பெண்ணே உன்னுடைய அன்பினாலும், கள்ளம் கபடமில்லாத உன் உள்ளத்தில் கொண்டிருக்கக்கூடிய பக்தியாலும் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நான் அடைந்த மகிழ்ச்சியின் காரணமாக உமக்கு நான் சில வரங்களையும் அளிக்க விரும்புகின்றேன். உனக்கு பிரியமான வரத்தினை கேட்பாயாக என்று கூறினார். அனைத்து உயிரினங்களிலும் சங்கமித்து கொண்டிருக்கக்கூடிய ஜகந்நாதன் தன்னிடத்தில் தோன்றி தனக்கு பிரியமான வரத்தினை கேள் என்று கூறியதைக் கேட்டதும் நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை! இறைவா தங்களை காண பல யுகங்கள் தவம் இருந்தும் இன்னும் உங்களின் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கக்கூடியவர்கள் எண்ணற்றவர்கள்.அவ்விதம் இருக்கையில் அடியேன் செய்த சிறு பூஜையை அன்போடு ஏற்றுக்கொண்டு எனக்கு வரம் அளிக்க வந்திருக்கும் தாங்கள் இந்த பிரபஞ்சத்திலேயே உயர்ந்தவரும் கூட என்று கூறி வணங்கினாள். பின்பு ராஜபத்தினியான அந்தப் பெண் சுவாமியை வணங்கி, அடியேன் இளம் வயதிலேயே கணவனை இழந்து, எந்தவிதமான துணையும் இல்லாமல் இறுதி காலத்தில் துணையாக இருக்க சந்தானமற்ற தீமைகள் நிறைந்த துர் திசையில் நின்று கொண்டு இருக்கின்றேன். ஆதலால் என்னுடைய இந்த பிறவி என்பது எவருக்கும் பயன்படாமல் வீணாக போயிற்று.இனிமேலாவது எனக்கு இருக்கக்கூடிய பிறவிகளில் உங்களுடைய கருணையினால் அடியேனுக்கு ஜென்ம ஜென்மங்களிலும் சர்வஜன புருஷர்களும், பிரம்மனுக்கு இணையாக இருக்கக்கூடிய புத்திர பாக்கியத்தினை அருள வேண்டும் என்றும், நானும் சகல ஜன மக்கள் மத்தியில் நற்குணங்களோடு பதிவிரதையாய் பிறக்க வேண்டும். தேவரீர் அருள் கூர்ந்து எமக்கு இந்த வரங்களை வழங்கி அருள வேண்டும் என்று வேண்டினாள். ஜகந்நாதனான விஷ்ணு பகவான் அந்த வனிதையை பார்த்து பெண்ணே! உனக்கு வேறு ஒரு பிறவியிலேயே செல்வாக்கும், புகழும் உடையவர்களாய் மகா உதாரண குணமுள்ள கணவர்கள் பத்துப்பேர் உண்டாவார்கள். உண்மையாகவும், எளிமையான குணநலன்களுடனும், மகாத்மாகவும், பலபராக்கிரமத்துடனும், பிரம்மனுக்கு சமமாகவும் உள்ள மகன் ஒருவனும் பிறந்து மூன்று லோகங்களும் நிறையும் படியான சந்தானம் உடையவர்களாய் அநேகம் வம்சங்களுக்கும் கர்த்தாவாகவும் இருப்பான்.நீயும் பேரழகும் நற்குணங்களும் நிறைந்து இருக்கக்கூடிய பெண்ணாகவும், சகல ஜனங்களின் இதயத்தில் ஆனந்தம் உண்டாகும் படியாக இருக்கக் கடவாய் என்று அருளி ஜகந்நாதன் அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றார். இவ்விதமாக ஸ்ரீமந் நாராயணனுடைய அருள் பார்வையினால் கிடைத்த வரங்களை பெற்ற அந்த ராஜ பத்தினியே இப்பொழுது மாரிஷையாக பிறந்து இருக்கின்றாள். ஆகையால் பிரசேதசர்களே அந்த கன்னியை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று சந்திரன் கூறினார். மாரிஷையின் தோற்றத்தினை பற்றி அறிந்துகொண்ட பிரசேதசர்கள் தங்கள் மனதில் இருந்துவந்த கோபத்தை குறைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். அவருடைய கோபம் குறைய குறைய அவர்களால் வெளியிடப்பட்ட அக்னி ஜுவாலையின் காந்தலானது குறையத் துவங்கியது. பூமியில் இருந்துவந்த மரங்களும் சில மரங்கள் அழிவிலிருந்து தப்பித்தன. பின்பு மரங்கள் தங்களுடைய கன்னிகையான மாரிஷையை பிரசேதசர்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் அளித்தார்கள். சுபங்கள் நிறைந்து இருக்கக்கூடிய ஒரு நன்னாளில் பிரசேதசர்கள் அந்த கன்னியை திருமணம் செய்துக் கொண்டார்கள். மகாவிஷ்ணு வழங்கிய வாரத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கு தட்ச பிரஜாபதி என்னும் மகன் பிறந்தான். இந்த தட்ச பிரஜாபதி பூர்வத்தில் பிரம்மா உடைய தர்ஷன அங்குஷ்டத்திலிருந்து பிறந்திருக்கிறான். மகா தபசியான அந்த தட்சன் பிரஜைகளை உருவாக்க நினைத்து சரங்களும், அசரங்களும் என இரு பாதங்களும், நான்கு பாதங்களுமான ஆன ஐந்து ஜாதகங்களைப் படைத்து பிரம்மாவின் ஆக்ஞையைப் பரிபாலித்தான். தட்ச பிரஜாபதி ஆக்ஞையைப் பரிபாலித்த விதத்தையும் எடுத்துரைக்கின்றேன். பொறுமையாக கேட்பாயாக என்று பராசரர் கூறினார். தட்ச பிரஜாபதி அறுபது பெண் குழந்தைகளை பெற்றான். அவர்களில், தாட்சாயினியை சிவபெருமானுக்கும், பத்துப் பேரை எமதருமனுக்கும், பதின்மூன்று பேரை காசியப முனிவருக்கும், இருபத்தேழு பெண்களை சந்திரனுக்கும், ரதியை மன்மதனுக்கும், மீதி பெண்களை அரிஷ்டநேமி, வாஹூபுத்திரர், ஆங்கீரஸர், கிரிசஷ்வர் ஆகிய முனிவர்களுக்கும் மணம் செய்வித்தான். அந்தப் பெண்களிடம் இருந்து தேவ, தைத்ய, தானவ, புசங்க, கந்தர்வ, தேவர்கள் என பலர் ஜெனித்தார்கள். இவர்கள் ஜெனித்த பிறகுதான் பிரஜைகள் ஆண்-பெண் உடலுறவின் மூலமாக முதன்முதலாக பிறக்க துவங்கினார்கள். அதற்கு முன் பூர்வ காலங்களில் எல்லாம் தவம் மிகுந்த மகாத்மாக்கள் வெறும் தரிசன ஸ்பரிச சங்கல்பத்தினாலேயே சந்தானங்களை எல்லாம் உருவாக்கி வந்தார்கள். இவ்விதமாக பராசர முனிவர் பிரஜைகளின் உருவாக்கத்தைப் பற்றி கூறி முடித்தார். பராசர முனிவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த மைத்ரேய முனிவருக்கு மனதில் சில கேள்விகளும் உருவாகத் தொடங்கின. தன்னுடைய மனதில் தோன்றி இருந்த அந்தக் கேள்விகளை தன்னுடைய குருநாதரான பராசரரிடம் வினவ துவங்குகின்றார். தட்சன் முதலான பல சகல தேவ முனிவர்கள் கூட்டமும் யுகங்கள் தோறும் பிறந்து லயத்தை அடைந்து வருகின்றார்கள். ஆகையால் இதில் நீ சந்தேகம் கொள்வதற்கு என்று எதுவும் இல்லை. ஏனென்றால் பூர்வ காலங்களில் வயது என்பதும் கிடையாது. பெரியவன் சிறியவன் என்ற எந்த பாகுபாடும், வேறுபாடுகளும் கிடையாது. தவத்திலும், ஞானத்திலும் உயர்ந்தவர்கள் மட்டுமே மேலானவர்களாக கருதப்பட்டார்கள் என்று கூறினார். தன்னுடைய குருநாதர் கூறிய கூற்றுக்களில் இருந்து தன்னுடைய கேள்விக்கான பதில்களை அறிந்துகொண்ட மைத்ரேயருக்கு மேலும் பல ஐயங்களும் உருவாகத் துவங்கின. அதாவது முனிவரே தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், ராட்சஸர்கள் முதலானவர்கள் எவ்விதத்தில் உருவாக்கினார்கள் என்பதை பற்றியும் தெளிவாக அடியேன் புரிந்து கொள்ளும் விதத்தில் கூற வேண்டும் என்று வேண்டி நின்றார் மைத்ரேயர். குருவானவர் தன்னுடைய மாணவர்களின் மனதில் தோன்றக்கூடிய ஐயங்களை தெளிவுப்படுத்தக்கூடிய கடமைகளை கொண்டிருப்பவர் ஆவார். அவ்விதத்திலேயே மைத்ரேயர் வினவிய இவ்வினாவிற்கு குருநாதரான பராசரர் விளக்கமளிக்க துவங்குகிறார்.படைப்பின் கடவுளான பிரம்ம தேவனின் நியோகத்தால் (கட்டளையின் அடிப்படையில்) தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், அசுரர்கள், பன்னகாதி, பூதங்கள் முதலானவர்களை தட்சன் தன்னுடைய சங்கல்பத்தினால் உருவாக்கியிருந்தார். தான் உருவாக்கிய அனைவரும் அபிவிருத்தி அடையாமல் தங்கள் இடத்திலேயே தங்களின் அழிவினையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவர்களின் அழிவுகளை பார்த்துக்கொண்டிருந்த தட்சன் மீண்டும் பிரஜைகளின் சிருஷ்டியில் ஈடுபட முயன்றார். பிரஜைகளின் சிருஷ்டியில் தட்ச பிரஜாபதி, வீரண பிரஜாபதியின் மகளான அசிக்கினி என்பவளை மணந்து கொண்டார். இவ்விருவரும் ஐந்தாயிரம் குழந்தைகளை பெற்றார்கள். அவர்கள் அனைவரும் அரிய சுவர்கள் என்கின்ற பெயரினால் கீர்த்தி அடைந்தனர். பின்பு இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரபஞ்சத்தில் பிரஜாவிருத்திகளை செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.அரிய சுவர்கள் அனைவரும் எத்தனித்துக் (முயற்சி செய்தல்) கொண்டிருந்த பொழுது நாரத முனிவர் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தார். நாரதர் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றாலே அவ்விடத்தில் ஒரு கலகம் என்பது நிகழப் போவதை அறிந்து கொள்ள முடியும். இப்பொழுதும் இவ்விடத்தில் ஒரு கலகத்தை ஏற்படுத்த போகின்றார்.