நாரதர் கலகம்
நாரதர் கலகம் நாரதரைக் கண்டதும் அனைவரும் அவரை வணங்கி வரவேற்றனர். பின்பு நாரதர் அவர்களை நோக்கி இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது போல அறிந்ததையும் அறியாதது போல வினவினார். அவர்கள் இந்த பூமியில் பிரஜைகளை உற்பத்தி செய்வது தொடர்பான முயற்சிகளில் நாங்கள் அனைவரும் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்கள். நாரதர் அவர்கள் கூறியதைக் கேட்டதும் புன்னகைத்த வண்ணமாக... நீங்கள் இந்த பூமியில் பிரஜைகளை உருவாக்குகிறீர்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் அதற்கு முன்னால் நீங்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டுமே... அதை இன்னும் செய்யவில்லையே! என்று கூறினார். அவர்கள் அனைவரும் சிந்தித்த வண்ணமாக நாங்கள் எந்தக் காரியத்தை முன்னதாக செய்யத் தவறிவிட்டோம் என்பதைப் பற்றி தெளிவாக உரைப்பீர்களாக... என்று கூறினார்கள். நாரதரும் தன்னுடைய அடுத்தடுத்த கணைகளை எய்தத் துவங்கினார். அதாவது பூமியில் நீங்கள் பிரஜைகளை உருவாக்க இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் உருவாக்குகின்ற பிரஜைகள் வாழ்கின்ற பூமியின் நிலப்பரப்பையும், அது எவ்வளவு உயரம் வளர்ந்துள்ளது என்பதையும், எவ்வளவு தூரம் தாழ்ந்து உள்ளது என்பதையும் அறிய வேண்டும் அல்லவா? ஆனால் நீங்களோ ஏதுமறியாத பாலியர்களாயிற்றே (இளமையானவர்களே).ஆகையால் இதை நீங்கள் அறிந்து கொண்டிருக்க மாட்டீர்கள். இந்த விஷயங்களை அறிந்து கொள்ளாமல் நீங்கள் எவ்விதத்தில் இந்த பூமியில் பிரஜைகளை உருவாக்குவீர்கள்? எந்தவிதமான தடைகளும் இல்லாமல் எல்லா இடத்திற்கும் செல்லக்கூடிய திறமைகளை கொண்டிருக்கக்கூடிய நீங்கள் அனைவரும், நீங்கள் உருவாக்குகின்ற பிரஜைகள் வாழ்கின்ற பூமியின் அளவு பரிணாமங்களை ஏன் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள்? என்று வினவினார். நாரதர் கூறிய பின்பு அவர் கூறிய கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை அறிந்து கொண்ட அரிய சுவர்கள் அனைவரும் பூமியின் பரிணாமத்தை நாங்கள் முழுமையாக அறிந்து கொண்டு வருகின்றோம் என்று கூறினார்கள். பின்பு நாரதரிடம் இருந்து விடைப்பெற்று நான்கு திக்குகளிலும் சென்று பூமியின் பரிணாமங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.எப்படி சமுத்திரத்தில் சேர்ந்த நதியானது திரும்பி வராமல் மறைந்து விடுகின்றதோ அதைப்போலவே இவர்கள் அனைவரும் பூமியின் பரிணாமத்தை அறிந்து கொள்ள சென்ற யாவரும் திரும்பி வராமல் நாசம் அடைந்தார்கள். தான் உருவாக்கிய அரிய சுவர்கள் அனைவரும் பயன் தராமல் நாசம் அடைந்ததை அறிந்து கொண்ட தட்சன் மீண்டும் பிரஜைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக வீரண புத்திரியான அசிக்கினி இடத்தில் மீண்டும் இணைந்து ஆறாயிரம் மக்களை பெற்றான். அவர்கள் அனைவரும் சபளா சுவர்கள் என்ற பெயர்களை பெற்று இந்த பூமியில் பிரஜைகளை சிருஷ்டிக்க வேண்டும் என்கின்ற தந்தையின் எண்ணத்தை ஏற்று அதற்கு தகுந்தாற்போல அவரவர்களின் முயற்சிகளையும் மேற்கொள்ள துவங்கினார்கள். மீண்டும் பூமியில் பிரஜைகளின் உற்பத்தியானது நிகழ இருக்கின்றது என்பதை அறிந்து கொண்ட நாரதர் மீண்டும் தன்னுடைய வேலைகளை துவங்கினார். அதாவது மீண்டும் நாரதர் சபளா சுவர்கள் இடத்தில் தோன்றி முன்பு செய்த அதே காரியத்தை இப்பொழுதும் செய்யத் துவங்கினார். அவர்களிடமும் முன்பு உரைத்தது போல நாரதர் உரைத்தார். அவர்களும் இவர் கூறிய கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை அறிந்து தாங்கள் தங்களுடைய மூத்த சகோதரர்கள் சென்ற மார்க்கத்திலேயே சென்று பூமியின் பரிணாமத்தை அறிந்து வருகின்றோம் என்று கூறி அவ்விடத்தில் இருந்து மறைந்து நான்கு திசைகளை நோக்கியும் பயணம் செய்தனர். பயணம் செய்த யாவரும் திரும்பி வராமலேயே இருந்து விட்டார்கள். அதுமுதல் தான் 'தூர தேசத்தில் இருக்கக்கூடிய சகோதரனை தேடிக்கொண்டு சென்ற ஒருவனும் திரும்பி வருவதில்லை' என்ற சொல்லும் வழக்கத்தில் ஏற்படத் துவங்கியது என்று கூறினார்.பிறகு சபளா சுவர்களும் முன்பு சென்றவர்கள் போல நாசம் அடைந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொண்ட தட்சன் அடைந்த கோபம் என்பது எல்லைகளைக் கடந்து இருந்தது. இந்த விதமான இழப்பிற்கு யார் காரணம்? என்பதையும் அவர் அறிந்து கொண்டார். இதற்கு காரணமாக இருக்கக்கூடியவரை சென்று அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் எண்ணினார். தட்ச பிரஜாபதி, நாரதர் இருக்கும் இடத்திற்கு சென்று அவர் ஏன் இவ்விதமான செயல்களைச் செய்தார்? என்பதை அறிந்து கொள்ள முயற்சித்தார். தட்ச பிரஜாபதி தன் இடத்திற்கு வந்திருப்பதை அறிந்த நாரதர் அவரிடம் எதையும் பேசாமல் அமைதியான நிலையிலேயே இருந்து வந்தார். நாரதரிடம் பேச முற்பட்டு கொண்டிருந்த தட்ச பிரஜாபதிக்கு அவரிடத்தில் இருந்த கோபம் அதிகரிக்கத் துவங்கியது.ஒரு நிலையில் நாரதர் எதையும் பேசாமல் அமைதியாகவே இருந்து கொண்டிருந்தார். அவர் ஆரம்பத்தில் இருந்து எதுவும் பேசவில்லை. பொறுமையை இழந்த தட்ச பிரஜாபதி மிகுந்த சினம் கொண்டு நாரதரை நோக்கி நீ எவ்விடத்திலும் நிலைபெறாமல் எங்கும் திரிந்து அலைந்து கொண்டே இருப்பாயாக! என்று சாபத்தையும் கொடுத்தார். தட்ச பிரஜாபதி அளித்த சாபம் நிறைவேற துவங்கியது. நாரதரால் ஓரிடத்தில் நிலையாக இருக்க முடியாமல் மூவுலகிலும் சஞ்சரித்து கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையும் உருவாகியது. தனக்கான சாபத்தையும் வரமாக மாற்றிக்கொண்டார் நாரதர். நாரதருடைய கலகம் நன்மையில் முடியும் என்பது போல அவருடைய அமைதியான இச்செயலானது அவருக்கு நன்மையை ஏற்படுத்தியது.தட்ச பிரஜாபதி மீண்டும் பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்று நினைத்து அசிக்கினியிடத்தில் இருந்து அறுபது பெண் குழந்தைகளைப் பெற்றான். தனக்குப் பிறந்த அறுபது பெண் குழந்தைகளில் பத்து பெண்களை எமதர்மனுக்கும், பதின்மூன்று பெண்களை காசியப முனிவருக்கும், இருபத்தி ஏழு பெண்களை சந்திரனுக்கும் திருமணம் செய்து வைத்தார். அரிஷ்டநேமிக்கு நான்கு பெண்களையும், வாஹூபுத்திரனுக்கு இரண்டு பெண்களையும், ஆங்கீரஸருக்கு இரண்டு பெண்களையும், கிரிசஷ்வரனுக்கு இரண்டு பெண்களையும் கொடுத்தார். முதல் பத்து பெண்களாகிய அருந்ததி, விசு, ஜாமி, லங்கை, பானு, மருத்தவதி, சங்கல்பை, முகூர்த்தை, சாத்தியை, அசுவை என்று குறிக்கப்பட்ட கன்னிகைகளை திருமணம் செய்து கொண்ட தருமன், விசுவையின் மூலமாக விசுவ தேவதைகளையும், சாத்தியையிடம் சாத்தியர்களையும், மருத்துவதியிடம் மருத்தவத்தர்களையும், முகூர்த்தையிடம் முகூத்தர்களையும், பானுவிடம் பானுக்களையும், லங்கையிடம் சகோஷனையும், ஜாமியிடம் நாகவீதி என்ற திவ்ய மார்க்க அபிமானியையும், அருந்ததியிடம் பூமி சேர்ந்த பொருட்கள் அனைத்தையும், சங்கல்பையிடம் சங்கல்ப்பன் என்பவனையும் பெற்றெடுத்தார்.அவர்களில் நல்ல வளர்ச்சியையும், அபாரமான பலத்தையும், தேக வளர்ச்சி உடையவர்களாக விளங்கக்கூடிய அக்கினி முதலான வசுக்கள் உடைய வம்சத்தின் விவரங்களைப் பற்றி எடுத்துரைக்கிறேன் நிதானமாக கேட்பாயாக. ஆபன், துருவன், சோமன், அனிலன், அனலன், பிரத்தியூஷன், பிரபாசன் முதலான வசுக்கள் எண்மர் ஆவார்கள். இவர்களில் ஆபனுக்கு வைஸ்தப்த்தன், சிரமன், சிராந்தன், துனி என்ற பிள்ளைகள் தோன்றினார்கள். துருவனுக்கு சகல உலகங்களையும் நடத்துகின்ற காலன் என்ற பிள்ளை தோன்றினார். சோமனுக்கு வர்ச்சன் என்ற மகன் பிறந்தான். அவன் பிறந்த பின்பு தான் மக்களுக்கு வர்ச்சஸ் என்கின்ற பிரகாசமும் தோன்றியது. தருமனுக்கு மனோகரை என்ற பெண்ணிடத்தில் திரவிணன், உதவகன், சிசிரன், பிராணன், ரமணன் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அனலனுக்கு சிவை என்பவனிடத்தில் புரோசவன், அவிக்கியாதகதி என்ற புதல்வர்கள் பிறந்தார்கள்.அனலனின் முதுகிலிருந்து சாகன், விசாகன், நைகமேஷன் என்ற மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். அனலன் என்றால் அக்னி ஆகும். ருத்திரனுடைய வீரியத்தை அக்னி ஏற்றுக்கொண்டு அந்த வீரியத்தில் உருவாகிய ஜுவாலை தாங்க முடியாமல் நாணல் புதரில் விட்டதனால் கங்கை நதிக்கரையில் சேர்ந்து கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட சுப்பிரமணியரை அக்னியின் புதல்வன் என்றும் கூறப்படுகின்றது. சாகன், விசாகன் என்பவர்கள் குமாரனின் தம்பிகள் ஆவார்கள். பிரத்யூஷனுக்கு தேவன் என்ற முனிவர் ஜெனித்திருந்தார். இந்த முனிவருக்கு பொறுமையும், பக்தியும் நிறைந்து இருக்கக்கூடிய இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் பிரகஸ்பதி ஆவார். பிரகஸ்பதியின் சகோதரியான ஒருத்தி அனேக யோக சித்திகள் உடையவராய் இருந்து வந்தாள். ஆனால் அவள் அந்த யோக சக்திகளில் விரக்தி அடைந்து பிரம்மச்சரியத்தோடு உலகெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அவள் சஞ்சாரித்து வந்துகொண்டிருந்த காலங்களில் வசுக்களில் எட்டாவதாக இருக்கக்கூடிய பிரபாசனனை திருமணம் செய்து கொண்டாள். தம்பதிகளாக இருக்கக்கூடிய அவ்விருவரும் விஸ்வகர்மாவை பெற்றெடுத்தார்கள். விஸ்வகர்மா விசித்திரமான நுட்பங்கள் பல நிறைந்து இருக்கக்கூடிய சிற்பக் கலைகளை நன்கு அறிந்தவனாக இருந்ததினால் தேவதச்சனாகி அனேக திவ்ய ஆபரணங்களையும், தேவர்கள் பயணம் செய்து கொள்ளக்கூடிய விசித்திரமான நுட்பங்கள் நிறைந்து இருக்கக்கூடிய விமானங்களையும் நிர்மாணம் செய்து கொடுத்தார். அவர் அறிந்த கலைகளில் நூல் மிகவும் நுண்ணிய அளவில் இருக்கக்கூடிய சிற்பக் கலைகளை அறிந்து கொண்டனர். உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய பிரஜைகள் அதை தொழிலாக கொண்டு அவர்களின் தீவனத்தை இன்றளவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். விஸ்வகர்மா மட்டுமில்லாமல் அவனுடைய அன்னையிடம் இருந்து அஜகபாத், அகிர்ப்புத்தினியன், துவஷ்டா, ருத்திரன் என்ற நான்கு குழந்தைகளும் பிறந்தார்கள்.அவர்களில் துவஷ்டாவிற்கு விசுவரூபன் என்னும் மகா தபசியான புத்திரன் ஒருவன் பிறந்திருந்தான். அறிஞரான ருத்திரனுடைய அம்சமாய் அரண்பகு, ரூபன், திரியம்பகன், விருஷாகபி, சம்பு, கபர்த்தி, ரைவதன், மிருக, வியாழன், சர்வன், கபாலி என்னும் பதினொரு பேர் பிறந்திருந்து ருத்திரர் என்ற பெயரைப் பெற்று மூன்று லோகங்களுக்கும் அதிபதியாய் விளங்குகிறார்கள் இவர்களிடமிருந்து அளவற்ற தேஜஸ் வாய்ந்த நூறு குழந்தைகள் பிறந்தார்கள்.இது இவ்விதமாக நிகழ்ந்து கொண்டு இருக்க காசியபருக்கு மனைவியாக இருந்த அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரசை, கஷை, சுரபி, வினதை, தாம்பிரை, குரோதவசை, இளை, கத்துரு, முனி என்ற பெயருடைய பதின்மூன்று பத்தினிகளில் அதிதி என்பவளுக்கு பூர்வத்தில் சாட்சுஷ மனுவந்தரத்திலே துஷிதர் என்ற பனிரண்டு தேவதைகள், வைவஸ்வத மனுவந்தரம் நிகழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது நாம் யாவரும் அதிதியின் கர்ப்பத்திலே ஜெனித்து பிறக்க வேண்டும் என்று நிச்சயித்து கொண்டே பிறந்தார்கள்.அவர்கள் இந்திரன், விஷ்ணு, அரியமன், தாதா, துவஷ்டா, பூஷா, விவசுவான், சவிதா, மித்திரன், வருணன், அமிசு, பகன் என்ற பெயர்களைப் பெற்று துவாச ருத்திரர்கள் என்று வழங்கப்படுகின்றனர். இப்படியாக வைவஸ்வத மனுவந்தரத்திலே ஆதித்தியர் என்று சொல்லப்படுவோர், சாட்சுஷ மனுவந்தரத்தில் துஷிதர் என்று வழங்கப்பட்டனர். சந்திரனுக்கு மனைவியான அஸ்வினி முதலான இருபத்தேழு பெண்களுக்கும் நன்மக்கள் உண்டாகினார்கள். அரிஷ்டநேமியின் பத்தினிகளாக இருக்கக்கூடிய நால்வருக்கும் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள்.வெகுபுத்திரனுக்கு பத்தினிகளாக இருக்கக்கூடிய இருவரிடத்திலும் காற்று, வெயில், மழை, துர்ப்பிஷம் இவற்றுக்கு ஏதுக்களாய் கபில வர்ணமும், இரத்த வர்ணமும், அரித்ரா வர்ணமும், நீல வர்ணமும் கொண்ட நான்கு மின்னல்கள் தோன்றின. ஆங்கிரசுக்கு பிரம ரிஷிகள் துதிக்கத்தக்க மேன்மை பொருந்தி இருக்கக்கூடிய பிரதியங்கிரகங்கள் என்ற மந்திரங்கள் உதித்தனர். பிருசாசுவனுக்கு, திவ்ய பாணங்கள் பிறந்தனர். இவ்விதமாக கல்பாதி காலத்திலே உண்டான முப்பத்து முக்கோடி தேவதைகளும் தினந்தோறும் சூரியன் தோன்றி மறைவதைப் போல ஒவ்வொரு மனுவந்தரத்திலும் அவரவர்களின் விருப்பபடியும் பிறந்து கொண்டே வருவார்கள்.
