பிரகலாதனின் வாழ்க்கை விவரங்களை அறிய ஆவல் கொள்ளும் மைத்ரேய முனிவர்
பிரகலாதனின் வாழ்க்கை விவரங்களை அறிய ஆவல் கொள்ளும் மைத்ரேய முனிவர் திதி என்பவளிடத்தில் காசியபருக்கு இரணியகசிபுவும், இரணியாக்ஷனும், விப்ரசித்தி என்ற ராக்ஷதனுக்குப் பாரியையான சிம்மிகை என்ற பெண்ணும் பிறந்தார்கள். அவர்களில் இரணியகசிபுக்கு அனகிலாதன், ஹிலாதன், பிரகலாதன், சம்கிலாதன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே பிரகலாதன் ஜீதேந்திரியனும், மகா பாகவதனுமாய் ஸ்ரீமந்நாராயணனிடத்தில் பக்தியுடையவனாய் விளங்கி வந்தான். விஷ்ணுவிடத்தில் இருக்கக்கூடிய பக்தியை முழுவதுமாக அகற்றும் பொருட்டு தைத்திய ராஜனான இரணியகசிபுவின் கட்டளையினால் அசுரர் உருவாக்கிய அக்னியானது பிரகலாதனுக்கு எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் வாசுதேவனின் இதயத்தில் வசித்து கொண்டு இருக்கக்கூடிய பிரகலாதனுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாமல் காத்து கொண்டு இருந்தார்.அசுரர்கள் ஏற்படுத்திய துன்பத்தில் இருந்து எந்தவிதமான காயங்கள், வலிகள் ஏதும் இல்லாமல் இருந்த பிரகலாதனை கண்ட அசுரர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்ததோடு மட்டும் அல்லாமல் வியப்பும் அடைந்தனர். பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் மன்னரிடம் அழைத்து சென்றனர். அடுத்த தண்டனையாக பிரகலாதன் என்னும் அந்த மகானுபாலன், பாசங்களினால் கட்டப்பட்ட கடலின் நடுவேயிருந்து அசைந்த போது அநேக மலைகளும், காடுகளும் நடுங்கின. பூமண்டலமே நடுங்கியது. எங்குமே எம்பெருமானைப் பாவித்ததால், அந்த மகானின் உடல் மலைபோலக் கடினமாயிற்று. அதனால் அசுரர்கள் பயன்படுத்திய அனைத்து பாணங்களும் அவரைப் பாதிக்கவில்லை. இரணியகசிபு ஏவிய லிஷாக்கினிச் ஜூவாலை வீசிக்கொண்டு வரும் சர்ப்பங்கள் யாவும் மகாத்மாவான பிரகலாதனை பீடிக்கவில்லை.பாரம் அதிகம் கொண்ட பர்வதங்களால் அமுக்கப்பட்ட போதும், ஸ்ரீவிஷ்ணு ஸ்மரணை என்ற கவசத்தால் பிரகலாதன் காக்கப்பட்டு, மரணத்தையும் வென்று வந்தார். சொர்க்கத்தினை விட உயரமான இடத்திலிருந்து பிரகலாதனை இரணியகசிபு கீழே தள்ளியபோதும் அந்த உன்னத ஆத்மாவான பிரகலாதனை பூமாதேவி ஏந்திக் கொண்டாள். பூமாதேவியின் இந்த செயலை கண்டதும் மிகுந்த கோபம் அடைந்த இரணியகசிபு சம்சோஷகன் என்ற வாயுவை ஏவினான். ஆனால் அவ்விடத்தில் நிகழ்ந்தது என்பது யாவரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. மதுசூதனான விஷ்ணுவின் இருதயத்திலே பிரகலாதன் இருந்ததால், அந்த வாயு பிரகலாதனிடம் புகுந்து நாசமடைந்து போயிற்று. திக்கு கஜங்கள் எல்லாம் இரணியகசிபுவின் உத்தரவினால் பிரகலாதனின் மீது பாய்ந்தன. ஆனால் திக்கு கஜங்களின் தந்தங்கள் யாவும் ஒடிந்து, மதமழிந்தன. நைத்தியப் புரோகிதர்களால் நிருமிக்கப்பட்ட கிருத்தியைகள் கோவிந்த சரணாரவிந்தங்களில் மனதை செலுத்தியிருந்த அந்த மஹா யோகிந்தனைப் பாதிக்காமற் போயின. மகாமாயாவியான சம்பராசுரன் என்பவன் பிரகலாதன் மீது ஏவிய அனந்த மாயைகளும் ஸ்ரீவிஷ்ணுவின் திருக்கையால் விடப்பட்ட சக்கராயுதத்தால் சாம்பலாகின. இரணியகசிபுவின் சமையற்காரர்கள் ஆலகாலம் என்ற கொடிய விஷத்துடன் கலந்து வைத்த அன்னமானது பிரகலாதனின் உதரத்தில் ஜீரணமாகி விட்டது. சர்வ பூதசமனும் சர்வ உயிர்களுக்கும் மித்திரனான அந்த மகாத்மா, தன் சரீரத்தைப் போலவும் தன் பிள்ளைகளைப் போலவும், சர்வ பூதங்களையும் லாலனை செய்து வருவான். அந்த ஞானி சத்புருஷர்களுக்கெல்லாம் உபமானமாகப் புகழ்பெற்று விளங்கினான்.மைத்ரேய முனிவருக்கு, பிரகலாதனின் வாழ்க்கை விவரங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க துவங்கியது. தன்னுடைய மனதில் தோன்றிய ஆவலை தன்னுடைய குருநாதரான பராசர முனிவரிடம், மனு வம்சத்தில் பிறந்து உன்னத ஸ்தானத்தை அடைந்த துருவன் முதலிய மன்னர்களை வரலாறுகளை உங்களிடமிருந்து விளக்கமாக நான் அறிந்து கொண்டேன். அதைப்போலவே அக்னியாலும் எந்தவிதமான ஆயுதங்களாலும் அழிக்காமல் இருந்து சமாகித சித்தனான அந்த தைத்திய உத்தமன் மலைகளினால் அமுக்கப்பட்ட போதிலும், மரணத்தை அடையாத அந்த உத்தம பிரகலாதனின் பெருமைகளையும், வரலாறுகளையும் நீங்களே எடுத்துரைப்பீர்களாக..தத்துவ ஞானமும், பகவானிடத்தில் எல்லையற்ற பக்தியும் உடைய பிரகலாத மகானுபாவனின் ஒப்பற்ற சரித்திரத்தை நான் உங்களிடமிருந்து விரிவாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். அந்த மகாதர்மிஷ்டனை, அசுரர்கள் ஏன் ஆயுதத்தால் பலவிதமான துன்பங்களை ஏற்படுத்தினார்கள்?மிகுந்த பாராங்கற்களால் கட்டி சிறு பாலகன் என்றும் பாராமல் சமுத்திரத்தில் ஏன் போட்டார்கள்? வலிமையையும், பலவிதமான பலமும் நிறைந்து இருக்கக்கூடிய திக்கஜங்களை கொண்டு அவனை ஏன் அனைவரும் இணைந்து துன்புறுத்த வேண்டும்? மிகவும் உயரமான இடத்தில் இருந்து அவனை ஏன் கீழே தள்ளினார்கள்? ஏன் அவனை அக்னியில் போட்டு எரித்தார்கள்? கொடிய விஷம் கொண்ட சர்ப்பங்களை கொண்டு அவனை ஏன் கடிக்கவிட்டார்கள்? இரணியகசிபுவின் சமையற்காரர், அன்னத்தில் ஆலகால விஷத்தை ஏன் கலந்து வைத்தார்கள்? இவையெல்லாம் ஏன், எதற்காக நிகழ்ந்தன? அந்தப் பரமபாகவதரான பிரகலாத ஆழ்வான் சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். மேற்கண்ட இந்த கொடிய செய்கைகள் எதனாலும் பிரகலாதன் மரணமடையாமல் இருந்தது மிகுந்த ஆச்சரியமல்ல. ஏனென்றால் ஸ்ரீவிஷ்ணுவிடத்திலே முழுமனதையும், சித்தத்தையும் நிலைபெற வைத்தவனை வெற்றி கொள்ள இந்த ஜெகத்தில் உண்டோ! தங்கள் குலத்தில் பிறந்த பிரகலாதன் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்தது அசுரரிடையே பகைமை ஏற்படுத்தியதா? அதுமட்டுமல்லாமல் கேசவனிடத்தில் பக்தி கொண்ட பிரகலாதாழ்வானுக்கு அசுரர்கள் ஏன் இத்தகைய கொடுமைகள் பல நிறைந்து இருக்கக்கூடிய செயல்களை செய்தார்கள்? இவற்றால் தான் பிரகலாதனின் பிரபாவங்களையும் கேட்பதற்கு நான் மிகவும் ஆவல் கொண்டிருக்கிறேன். தாங்கள் கிருபை கூர்ந்து அதைக் கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார்.தன்னுடைய மாணவன் கொண்டு இருக்கக்கூடிய ஆவலையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து கொண்ட பராசர முனிவர், பரமஞானியும், யாவருக்கும் உதாரணமாக விளங்கக்கூடிய சரிதராமாகவும் இருக்கின்ற பிரகலாதரின் பிரபாவத்தை எடுத்துரைக்க துவங்கினார்.
