போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

bookmark

(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

வலிமையற்ற தோளினாய் போ போ போ
   மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
   பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ
   ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
   கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ    1

இன்று பார தத்திடை நாய்போல
   ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
   நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
   சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
   விழிம யங்கி நோக்குவாய் போ போ போ    2

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
   வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
   நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
   வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
   சிறிய வீடு கட்டுவாய் போ போ போ    3

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
   தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
   நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
   தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
   சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.    4
   
(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
   உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
   கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
   சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
   ஏறு போல் நடையினாய் வா வா வா    5

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
   வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
   பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
   நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
   தேசமீது தோன்றுவாய் வா வா வா    6

இளைய பார தத்தினாய் வா வா வா
   எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
   உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
   கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
   விழியி னால் விளக்குவாய் வா வா வா    7

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
   விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
   முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
   கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
   ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா    8